சென்னை: இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் (94), உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். ராமகோபாலன் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 26-ம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்டதிலிருந்து மீண்டு, சிகிச்சைப்பெற்று வந்த ராம கோபாலனுக்கு மீண்டும் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக சிந்தாதரிப்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. அஞ்சலி செலுத்திய பின் திருச்சியில் அடக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.