பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றிய விவகாரம்: போதிய ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி மீதான வழக்கு முடித்துவைப்பு

சிபிஐ தரப்பு கோரிக்கை ஏற்று நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றிய விவகாரத்தில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சிபிஐ தரப்பே வழக்கை முடித்துக் கொள்வதாக கூறிய கோரிக்கையை ஏற்று, சேகர் ரெட்டி மீதான வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 நோட்டுகளை கடந்த 2016ம் ஆண்டு தடை செய்து விட்டு புதிய நோட்டுகளை மோடி அரசு அறிமுகம் செய்தது. தொழிலதிபர் சேகர் ரெட்டி பழைய நோட்டுகளை, வங்கி அதிகாரிகளின் உதவியுடன் மாற்றி, அதற்கு பதிலாக புதிய ₹2 ஆயிரம் நோட்டுகளை வாங்கியதாக புகார் எழுந்தது

இதனை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் சேகர் ரெட்டி மற்றும் அவருடன் பிரேம்குமார், ஸ்ரீனிவாசுலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வங்கிகள் தொடர்பான மோசடி வழக்குகளை விசாரிக்கும், சென்னை 11வது சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஜவஹர் முன்பு நடந்து வந்தது.  இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: சேகர் ரெட்டி, பிரேம்குமார், ஸ்ரீனிவாசுலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா ஆகிய 6 பேர் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் உதவியுடன் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.  இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் மீதும், குற்றத்தை நிரூபிப்பதற்கான எந்தவித சரியான ஆதாரங்களும் இல்லை.

எனவே அவர்கள் மீதான இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், சேகர் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், 6 பேரும் வங்கி அதிகாரிகளின் துணையுடன், இந்த மோசடியில் ஈடுபட்டதற்கும், இந்திய நாட்டிற்கு பணமிழப்பு செய்ததற்கான ஆதாரங்களும் ஏதும் இல்லை. அவர்கள் மீதான புகாரில் எந்த முகாந்திரமுமில்லை. இந்த வழக்கில் 879 ஆவணங்கள், 170 சாட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் அதில், இவர்கள் இந்திய நாட்டிற்கு குற்றம் செய்தவர்கள் என்பதை நிரூபணம் செய்ய எந்தவித போதிய ஆதாரங்களும் இல்லை.

எனவே, ஆவணங்களும் திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும். வாய்வழி ஆதாரமாக இந்த வழக்கில் 247.13 கோடி பணம் மோசடி செய்து நாட்டிற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. அதற்கான போதிய ஆதாரங்கள் ஏதுமில்லை. இந்த வழக்கு தகவலின்படியே பதிவு செய்யப்பட்டது. எனவே, இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.  இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதன்படி, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

ஏற்கனவே, சேகர்ரெட்டி மீது தொடரப்பட்ட 2 வழக்கிலும் ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் மீதான 3வது வழக்கிலும் ஆதாரங்கள் இல்லை என்று சிபிஐயே மனு தாக்கல் செய்து, வழக்கு நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: