விவசாயிகள் வளமாக இருந்தால் நாடு பலமாக இருக்கும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் அடித்தளமே விவசாயம் தான்: பிரதமர் பேச்சு

புதுடெல்லி: தற்சார்பு இந்தியா திட்டத்தில் விவசாயிகள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று வானொலியில், ‘மான் கீ பாத்’ நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அப்போது, நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து அவர் பேசுவார். நேற்றைய ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில், கடும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வேளாண் மசோதாக்களின் முக்கியத்துவம் குறித்து மோடி பேசியதாவது: மகாத்மா காந்தியின் பொருளாதார தத்துவத்தின் சாரத்தை நாடு பின்பற்றி இருந்தால் தற்சார்பு இந்தியா பிரசாரத்திற்கு எந்த அவசியமும்  இருந்திருக்காது.

ஏனெனில், இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தற்சார்பை அடைந்திருக்கும். விவசாய துறையின் வலிமை மற்றும் விரைவில் மீளும் திறனானது கொரோனா வைரஸ் நோய் தொற்று காலத்தில் விவசாயிகளின் பிரதிபலிப்பாக இருந்தது. ‘ஆத்மநிர்பார் பாரத்’ எனப்படும், ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் அடித்தளமாக விவசாயம் உள்ளது. தற்சார்பு இந்தியாவை கட்டி எழுப்பும் முயற்சிகளில் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். விவசாயிகள் வளமாக இருந்தால் நாடு வலுவாக இருக்கும். இந்தியாவின் கடின உழைப்பாளியான விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் வேண்டும்.

வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைப் படுத்தும் சட்டத்தால் நாட்டில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அரசிற்கு மட்டுமல்ல யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்யலாம்.

இதுதான் அவர்களின் பலம். இது அவர்களின் முன்னேற்றத்தின் அடிப்படையாகும். பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமின்றி, கோதுமை, அரிசி, கரும்பு போன்றவற்றையும், அவர்கள் தங்கள் நிலங்களில் பயிரிடும் எதையும் இப்போது யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விற்பனை செய்யலாம். கொரோனா நோய் தொற்று காலத்தில் உலகம் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்து வருகின்றது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது முக்கியமாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

* கதை சொல்லுங்க வாழ்க்கை நல்லாயிருக்கும்

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘கதைகள் கூறுவது நமது குடும்பத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். ஒரு குடும்பமாக இருந்து கதை சொல்வதற்கு சற்று நேரத்தை ஒதுக்குங்கள். இது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். அதேபோல், இந்தியாவை பெருமைப்படுத்திய ஆண்கள், பெண்கள் குறித்த கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்,’’ என்றார்.

Related Stories: