ராமர் கோயில் பூமி பூஜையை தொடர்ந்து அயோத்தியில் புறம்போக்கு நிலங்களுக்கு வந்தது ஆபத்து: விண்ணைத் தொடும் விலையால் வளைத்து போட்டு விற்பனை

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டதில் இருந்து அங்கு நிலத்தின் மதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. புண்ணிய பூமியில் காணி நிலமாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென பலரும் விரும்புவதால், ஏரி மற்றும் புறம்போக்கு நிலங்களுக்கும் மவுசு கூடி விட்டது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த மாதம் 5ம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணிகளை தொடங்கும் வகையில் பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது.

ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டால் அயோத்தி மிகப்பிரபலமான ஆன்மிக சுற்றுலா தலமாக மாறிவிடும். இதனை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் வசதிக்காக 3 நட்சத்திர ஓட்டல்கள், சர்வதேச விமான நிலையம், புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் உட்பட பல்வேறு மேம்பாட்டு பணிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்நிலையில், ராமர் கோயில் வரவுள்ளதை அடுத்து இங்கு மனைகளின் விலையானது அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட் படுபயங்கரமாக சூடு பிடித்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததில் இருந்து 30-40 சதவீதம் விலை உயரத் தொடங்கி விட்டது. தற்போது கோயில் கட்டும் பணி ஆரம்பித்துள்ள நிலையில், மனையின் விலை இரு மடங்காகி உள்ளது.

அயோத்தி ஆவாத் பல்கலைக்கழக பேராசிரியர் வினோத் குமார் ஸ்ரீவத்சவா கூறுகையில், ‘‘புண்ணிய பூமியான அயோத்தியில் காணி நிலமாவது சொந்தமாக இருக்க வேண்டுமென சாமானியன் முதல் பெரிய அதிகாரிகள் வரை விரும்புகிறார்கள். இதனால், பலரும் இங்கு இடம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் விரைவில் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயரும்,’’ என்கிறார். இதனால், ஏரிகள், புறம்போக்கு நிலங்களை அரசியல் கட்சியினரும், தாதாக்களும் வளைத்து போட்டு, மனைகளாக கூறு போட்டு விற்பதில் தீவிரம் காட்ட தொடங்கி விட்டனர். மேலிடத்தின் ஆசிர்வாதத்துடன் இதுபோன்ற பல இடங்களில் தற்போது ரியல் எஸ்டேட் ஏஜென்டுகள் ‘நிலம் விற்பனைக்கு’ போர்டை வைத்து, கூவி கூவி விற்கின்றனர். பெரியளவில் பணம் சம்பாதிக்க முடியாத ஏழைகள், புண்ணியபூமியில் காணி நிலமாவது வேண்டும் என்கிற ஆசையில் இந்த இடங்களையும் வாங்குகின்றனர்.

* இப்படியும் ஒரு சிக்கல்

நிலத்தின் தேவை அதிகரித்த போதிலும் மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்காக பின்னர் நிலத்தை கையகப்படுத்தலாம் என்பதால் முதலீட்டாளர்கள் இந்த விவகாரத்தில் கவனமுடன் இருக்கிறார்கள். புதிதாக நில உரிமையாளர்கள் தற்போதுள்ள நிலத்தின் விலைக்கு பணத்தை வழங்கினால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

விலை எவ்வளவு?

* அயோத்தி புறநகரில் ஒரு சதுர அடி நிலம் ரூ.1000 முதல் ரூ.1500 வரை விலை போகிறது. கடந்த ஆண்டு இப்பகுதியில் ரூ.400-ரூ.500 வரை மட்டுமே விற்கப்பட்டது.

* ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட பின்னர் நிலத்தின் மதிப்பானது இருமடங்காக அதிகரித்துள்ளது. நகரின் மையப் பகுதியில் தற்போது சதுரஅடி நிலமானது ரூ.2000-ரூ.3000 வரை விலை போகிறது. இதற்கு முன், அதிகபட்சம் ரூ.1000 மட்டுமே விலை போனது.

Related Stories: