பினீஷ் கோடியேறிக்கு 4 மாவட்டங்களில் சொத்து: அமலாக்கத் துறை நோட்டீஸ்

திருவனந்தபுரம்: கேரள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணனின் 2வது மகன் பினீஷ் கோடியேறி. இவர் மீது பணமோசடி உள்பட ஏராளமான புகார்கள் இருந்தாலும் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் பெங்களூருவில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த முகமது அனூப் என்பவருடன் பினீஷ் கோடியேறிக்கு தொடர்பு இருப்பதும், திருவனந்தபுரம் அமீரக தூதரக விசா ஸ்டாம்பிங் நிறுவனத்தில் பங்கு இருப்பதும் தெரியவந்தது. இந்த நிறுவனம், தங்க கடத்தலில் சிக்கியுள்ள சொப்னாவுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளது.

கேரளாவில் உள்ள 4 மாவட்டங்களில், பினீஷ் கோடியேறி ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்தே, ‘அனைத்து சொத்து விபரங்கள் குறித்த  தகவல்கள் வழங்கப்பட வேண்டும். அனுமதியின்றி சொத்துக்களை வேறு பெயருக்கு மாற்றக் கூடாது,’ என்று இவருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும். இவர் மீது கருப்பு பண மோசடி தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்தது. அமலாக்கத்துறை நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையின்போது, பினீஷின் ​​சொத்து குறித்த ஆவணங்கள் விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. இத்துடன் பதிவுத்துறை வழங்கிய தகவல்களை பினீஷ் வழங்கிய தகவலுடன் ஒப்பிட்டு பார்த்து, மேலும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. எதிர் வரும் நாட்களில் பினீஷை அமலாக்கத் துறை மீண்டும் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* தலையிட மாட்டோம்

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘எனது மகன் பினீஷ் கொடியேறிக்கு எதிரான விசாரணையில் நானோ அல்லது கட்சியோ தலையிட மாட்டோம். இது குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. எந்த விசாரணையும் நடக்கட்டும். அவர் குற்றவாளி என்றால் தண்டிக்கலாம்,’’ என்றார்

* புகைப்படம் மார்பிங் அல்ல

தங்க கடத்தல் ராணி சொப்னா, கேரள அமைச்சர் மகன் ஒருவருடன் நிற்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ‘இது உண்மை இல்லை; மார்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட புகைப்படம்,’ என தெரிவிக்கப்பட்டது. இந்த புகைப்படம் போலியானது என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணனும் தெரிவித்தார். இந்நிலையில், இது குறித்து சொப்னா  கூறுகையில், ‘‘அந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது அல்ல. இது, துபாயில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் நட்பு கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது,’ என கூறியுள்ளார். கேரளாவில் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும், ‘லைப் மிஷன்’ திட்டத்தில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், சொப்னாவுக்கு ரூ.1 கோடி கமிஷன் கொடுத்துள்ளது. அதில், கேரள அமைச்சர் ஒருவரின் மகனுக்கும் துபாய் ஓட்டலில் கமிஷன் கொடுக்கப்பட்டது. இது, அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படம்தான் என இதற்கு முன்பு தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: