திருப்பத்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.ஐ. உயிரிழப்பு!.. மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி!!!

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். இவரின் உடலுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திருப்பத்தூரில் இதுவரை கொரோனா தொற்றினால் 4702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 86 பேர் கொடிய கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர். மேலும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 583ஆக உள்ளது. பூரண குணமடைந்து வீடு திருப்பியவர்களின் எண்ணிக்கை 4033 ஆக உள்ளது. இந்த நிலையில் ஆம்பூரில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த சண்முகம் என்பவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இவை காவலர்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றிய சண்முகம் என்பவருக்கு கடந்த 12ம் தேதி முதல் காய்ச்சல் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடலுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 51 வயதான உதவி ஆய்வாளருக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

Related Stories: