வாய்க்காலை முறையாக தூர்வாராததால் வடிகால் நிரம்பி தண்ணீர் வயல்களில் புகுந்தது: 100 ஏக்கர் விவசாயம் பாதிக்கும் அபாயம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வாய்க்காலை தூர்வாராததால் வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வயல்களை சூழ்ந்ததால் பாய்நாற்றங்கால் அனைத்தும் நீரில் மூழ்கியது. மயிலாடுதுறை அருகே உள்ள நெடுமருதூர் கிராமம். இக்கிராமத்திற்கு மஞ்சளாற்றிலிருந்து கோடங்குடி மதகு வழியாக கழனிவாசல் வாய்க்கால்மூலம் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. இப்பகுதியில் 500 ஏக்கர் விவசாயம் இருபோகமும் செய்யப்பட்டு வருகிறது. குறுவை நிலத்தடி நீரை கொண்டும் தாளடி ஆற்றுநீர் பாசனம் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள ஐந்துக்கு மேற்பட்ட ஆறு மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. கழனிவாசல் வாய்க்கால் அரைகுறையாக தூர்வாரப்பட்டது.

கழனிவாசல் வாய்க்காலிலிருந்து கடலாழி ஆறுக்கு செல்லும் வடிகால் வாய்க்கால் மட்டும் கடந்த 5 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. மழைநீர் மற்றும் ஆற்றில் வெள்ளம் வந்தால் இந்த வாய்க்கால் வழியாகத்தான் தண்ணீர் சென்று கடலாழியில் வடியும். ஆகவே இந்த வாய்க்காலை தூர்வாரவேண்டும் என்று விவசாயிகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகள் அப்பகுதியில் உள்ள 100 ஏக்கர் நிலத்திற்காக தாளடி விவசாயத்திற்கு நாற்று விட்டுள்ளனர். அனைத்தும் பாய் நாற்றங்காலாக உள்ளது. மயிலாடுதுறையில் நேற்றுமுன்தினம் தாளடி விவசாயத்திற்காக கழனிவாசல் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நெடுமருதூர் பகுதி கழனிவாசல் வாய்க்காலிலிருந்து பிரிந்துசெல்லும் கடலாழி வடிகால் வாய்க்கால் பிரியும் இடத்தில் தண்ணீர் எதிர்த்து அருகில் இருந்த வயல்களில் புகுந்து வெள்ளக்காடானது. இதனால் அப்பகுதியில் போடப்பட்டிருந்த பாய்நாற்றங்கால் அனைத்தும் மூழ்கிவிட்டது. உடனடியாக பொதுப்பணித்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சென்று நீரின் அளவைக் குறைத்தனர். இருந்தும் தண்ணீர் வடியவில்லை. நாற்றுகள் மூழ்கியே காட்சி தருகிறது. இந்த வாய்க்காலை தூர்வாரவில்லை என்றால் விவசாயமும் செய்யமுடியாது. 100 ஏக்கர் நிலமும் எப்பொழுதும் தண்ணீரில் மூழ்கியபடியே கிடக்கும்.

ஆகவே நாகை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெடுமருதூர் வந்து இப்பகுதியை பார்வையிட்டு வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: