தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் துவக்கம்: அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர்: தமிழகத்தில் வரும் 1ம் தேதி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதல்வர் பழனிசாமி துவக்கி வைப்பார் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவாரூரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல் ஒரே நாடு  ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதல்வர் பழனிசாமி துவக்கி வைப்பார். இதன்மூலம் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். தற்போது மண்ணெண்ணெய் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக கூறுவதைவிட விலையில் சற்று மாற்றம் என்றுதான் கூற வேண்டும்.  தமிழகத்திற்கு கடந்த காலங்களில் 56 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்த நிலையில் காஸ் சிலிண்டர் இணைப்பினை காரணம் காட்டி 11 ஆயிரம் கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தமிழகத்திற்கான தேவை 33 ஆயிரம் கிலோ லிட்டர் என்ற நிலையில் அதனை கேட்டுப் பெறுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சசிகலா விடுதலை குறித்து அவரே அடுத்தவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என தெரிவித்துள்ள நிலையில் அது பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.  தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: