கரையோர மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் பெருஞ்சாணியில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: முக்கடல் அணை நீர் மட்டம் 20 அடியை தாண்டியது

நாகர்கோவில்: பெருஞ்சாணி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பை தொடர்ந்து, கரையோர கிராம மக்களை தங்க வைக்க வசதியாக  முகாம்கள் ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் 4 நாட்களாக கனமழை நீடித்து வந்த நிலையில் கடந்த இரு நாட்களாக மழை குறைந்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மற்ற இடங்களில் மழை இல்லை. மலை பகுதிகளிலும் மழை இல்லாததால் அணைகளுக்கான நீர் வரத்தும் குறைந்தது. நேற்று முன் தினம் பேச்சிப்பாறை அணைக்கு 1,064 கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று காலை நீர் வரத்து 694 கன அடியாக குறைந்தது. அணை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 35.10 அடியாக உள்ளது.

பெருஞ்சாணி அணைக்கான நீர் வரத்து 1,785 கன அடியில் இருந்து, நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 945 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 386 கன அடியில் இருந்து 542 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணை நீர் மட்டம் 72.70 அடியாக உள்ளது. சிற்றார் 1, 12.46 அடியாகவும், சிற்றார் 2, 12.56 அடியாகவும் உள்ளன. மாம்பழத்துறையாறு 54.12 அடியாக தொடர்ந்து நீடிக்கிறது. பொய்கை 9.60 அடியாகவும், முக்கடல் அணை நீர் மட்டம் 20.3 அடியாகவும் உள்ளன. நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல்  அணை நீர் மட்டம் மைனஸ் அடியில் இருந்த நிலையில், தற்போது மளமளவென உயர்ந்து 20 அடியை எட்டி இருப்பது பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பெருஞ்சாணி அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து கரையோர கிராமங்களுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. அணை நீர்  மட்டம் 75 அடியை எட்டும் பட்சத்தில், பெருஞ்சாணி அணையில் இருந்து பரளியாற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டு வலியாற்று முகம், அருவிக்கரை, திருவட்டார், மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காப்பட்டணம் கடலில் தண்ணீர் வந்து சேரும். எனவே மேற்படி ஆற்றின் வெள்ள போக்கினை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பெருஞ்சாணி அணையில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறக்கும் பட்சத்தில் ஆற்றின் கரையோர மக்களை பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு மாற்றம் செய்ய தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி உத்தரவிட்டுள்ளார்.

திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர் வட்டாட்சியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பரளியாறு, தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தாழ்வான மற்றும் பாதிப்புக்குள்ளாகும் குடியிருப்புகளில் வசிக்கிற பொதுமக்களுக்கு, எச்சரிக்கை அறிவிப்பு தண்டோரா மூலம் வெளிப்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நேற்று பூதப்பாண்டி, அருமநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை இருந்தது. நாகர்கோவில் மாநகரில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. மாலை வரை மழை இல்லை.

Related Stories: