டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனாவுடன் டெங்கு!

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கடந்த 14ம் தேதி கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் வீட்டில் தன்னை  தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும், நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல் மற்றும் சுவாசத்தில் சிரமம் ஏற்பட்டதால் லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு நேற்று மாற்றப்பட்டார். கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில், அடுத்தகட்ட சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சலும் இருப்பது உறுதியாகி உள்ளது.

மருத்துவர்கள் மணீஷ்  சிசோடியாவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முன்னதாக கடந்த 14ம் தேதி டெல்லி சட்டப் பேரவை கூட்டம் நடைபெற்றது. அதில், உடல்நலக்குறைவு  காரணமாக மணீஷ் சிசோடியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மணீஷ் சிசோடியா தவிர டெல்லி எம்எல்ஏக்கள் கிரிஷ் சோனி, பிரமிளா டோகாஸ், ரவி, சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் கொரோனா தொற்று பாதிப்பால் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories: