நெல்லையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்ததால் கேர் சென்டர்கள் மூடல்

*அரசு மருத்துவமனையில் 300 பேர் மட்டும் சிகிச்சை

நெல்லை : கடந்த மார்ச் மாதம் இறுதியில் நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் பரவத்தொடங்கியது. அன்று முதல் இன்றுவரை நாள் தவறாமல் நோய் பரவல் நீடிக்கிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பரவல் அலை அதிகமாக இருந்தது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு நாளில் சராசரியாக 300 பேர் வரை பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தன.

 கொரோனா நோயாளிகளால் அரசு மருத்துவமனை இருக்கைகள் நிரம்பியதால் அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, பொன்னாகுடி ஸ்காட் மருத்துவமனை, பத்தமடை சிவானந்தா ஆசிரமம், கூடங்குளம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும் கொரோனா நோயாளிகள் சேர்க்கப்பட்டனர். இதுதவிர நெல்லையில் 5 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் சேர்க்கப்பட்டனர்.

இதனால் இந்த மருத்துவமனை படுக்கைகளும் நிரம்பின. இந்நிலையில் கடந்த இருவாரங்களாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் குறைந்து வருகிறது. தற்போது நாள்தோறும் சராசரியாக 100 பேருக்கு கொரோனா புதியதாக பரவுகிறது. கடந்த 7ம் தேதி பொது போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை. அதே நேரத்தில் இன்றுவரை முழுமையாக கட்டுக்குள் வராதநிலை தொடர்கிறது.

நாள்தோறும் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வதாலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வெறிச்சோட தொடங்கியுள்ளன. இதையடுத்து கொரோனா கேர் சென்டர்களாக செயல்பட்ட நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, அரசு சித்த மருத்துவக்கல்லூரி, சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் கொரோனா நோயாளிகளை சேர்ப்பதை நிறுத்தயுள்ளனர். அதே நேரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கூடங்குளம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கை நீடிக்கிறது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நாள்தோறும் 600 முதல் 700 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக 300 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 200 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவர். 100 பேர் கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்கள் ஆவர்.

இதுபோல் கொரோனா அவசர சிகிச்சை பிரிவிலும் நோயாளிகள் நெரிசல் குறைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆயினும் நோய் தாக்கம் நீடிப்பதால் பொதுமக்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சித்தாவில் 1133 பேர் நலமடைந்தனர்

நெல்ைல அரசு சித்த மருத்துவக்கல்லூரி கடந்த சில மாதங்களாக கொரோனா கேர் சென்டராக செயல்பட்டது. நேற்று கடைசியாக சிகிச்சை பெற்ற 7 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இந்த மருத்துவமனையில் மட்டும் கடந்த 4 மாதங்களாக 1133 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளனர். இங்கு சித்த மருத்துவ மருந்துகளும் சித்த உணவு முறைகளும் நோயாளிகளுக்கு வழங்கி பராமரிக்கப்பட்டனர்.

Related Stories: