விடுதலை செய்வது உள்பட என்னை பற்றிய விவரங்களை ஆர்டிஐ.யில் வழங்கக் கூடாது: சிறை அதிகாரிக்கு சசிகலா கடிதம்

பெங்களூரு: ‘நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள நான் எப்போது விடுதலை செய்யப்படுவேன் என்பது உள்பட எந்த விவரத்தையும் தகவல் உரிமை சட்டத்தில் (ஆர்டிஐ) விண்ணப்பித்து யார் கேட்டாலும் கொடுக்கக் கூடாது,’ என்று சிறை அதிகாரிக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்தாண்டு ஆரம்பத்தில் முடிகிறது.

இதனிடையில், சிறையில் உள்ள சசிகலாவை தண்டனை காலத்தில் எத்தனை பேர் சந்தித்து பேசியுள்ளனர். அவரின் சிறை காலத்தில் விடுமுறை நாட்கள் கழிக்கப்படுமா? சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரா? என்பது உள்ளிட்ட பல விவரங்களை வழங்கும்படி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார். அவரின் விண்ணப்பங்களுக்கு சிறை நிர்வாகம் பதில் கொடுத்து வருகிறது. அந்த விவரங்கள் மீடியாக்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா முதன்மை சிறை கண்காணிப்பாளருக்கு சசிகலா எழுதியுள்ள கடிதத்தில், ‘எனது விடுதலை உள்பட என்னை பற்றி எந்த விவரத்தையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்(ஆர்.டி.ஐ) கீழ் யார் கேட்டாலும் வழங்கக் கூடாது’ என்று கூறியுள்ளதுடன், இது தொடர்பாக டெல்லி திகார் சிறையில் வேதபிரகாஷ் ஆர்யா தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு கடிதம் இணைத்து அனுப்பியுள்ளார்.

* கொடுக்க மறுத்தால் போராட்டம்

சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எந்தெந்த விஷயங்கள் குறித்து கேட்ககூடாது என்று விதிமுறைகள் உள்ளதோ, அதை தான் கேட்க கூடாது. பொது விஷயங்களை கேட்டு பெற யாரும் தடை விதிக்க முடியாது. நான் கேட்டுள்ள விவரங்கள் கொடுக்க மறுத்தால் சட்ட போராட்டம் கையில் எடுப்பேன்,’’ என்றார்.

Related Stories: