கோவையை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஆண்டாள் கோயிலில் யாகம்: ஆகமவிதிகளை மீறியதாக குற்றச்சாட்டு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்து வந்த அதிமுக பிரமுகர், ஜெயலலிதா படத்துடன் சிறப்பு யாகம் செய்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக இளைஞர் பாசறை மாநில துணை செயலாளராக இருப்பவர் விஷ்ணு பிரபு. இவர் கோவையில் இருந்து நேற்று தனது குடும்பத்தினருடன் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூருக்கு தனி ஹெலிகாப்டரில் வந்தார். ஹெலிகாப்டர் திருவில்லிபுத்தூரில் உள்ள சிஎம்எஸ் பள்ளி மைதானத்தில் வந்திறங்கியது. அங்கிருந்து காரில் குடும்பத்தினருடன், ஆண்டாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் வளாகத்திலுள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் நடந்த சுதர்சன ஹோமம் எனப்படும் சிறப்பு யாகத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் விஷ்ணு பிரபு கூறுகையில், ‘‘மீண்டும் 3வது முறையாக அதிமுக ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதற்காக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சன்னதியில் ஹோமம் நடத்தப்பட்டது’’ என்றார். ‘முதல்வருக்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டதா’ என்று கேட்டபோது, ‘‘ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகத்தான் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது’’ என்றார்.ஆண்டாள் கோயிலுக்கு தரிசனம் செய்ய அதிமுக பிரமுகர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதும், ஹோம பூஜை நடத்தச் சென்றதும் திருவில்லிபுத்தூரில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா படத்துடன்...

திருவில்லிபுத்தூர் கோயிலில் நடந்த சுதர்சன யாகத்தின்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அதிமுக நிர்வாகிகள் வைத்திருந்தனர். இதுகுறித்து கோயில் குருக்கள் சிலரிடம் கேட்டபோது, ‘‘வீட்டில் திதி தரும்போதுதான் இறந்தவர் படங்களை வைப்பார்கள். ஆனால், கோயிலில் நடக்கும் முக்கிய யாகங்களில் இறந்தவர்களின் படங்களை வைக்கக்கூடாது. ஆகம விதிப்படி இது பெரும் தவறு’’ என்றனர்.

Related Stories: