வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைக்கு போலி ஆப்ஸ்களை வைத்து 15 லட்சம் நூதன மோசடி: 2 பேர் கைது

வேளச்சேரி: அடையார் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன் (42). சாப்ட்வேர் ஊழியர். கடந்த 6 மாதத்திற்கு முன் நில புரோக்கர் ஒருவர் திருப்பூரை சேர்ந்த பிரபாகரன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, அவர் “வௌிநாட்டு பணப்பரிவர்த்தனை செயலி பதிவிறக்கம் செய்து அக்கவுண்ட் தொடங்கினால் நல்ல கமிஷன் கிடைக்கும்” என மோகனிடம் ஆசைவார்த்தை கூறினார்.   பின்னர் அவர் சில நாட்கள் கழித்து ரமேஷ் ரெட்டி என்பவரை மோகனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, அவர் 2 செயலிகளை பயன்படுத்தி அக்கவுன்ட் தொடங்க இணையதள முகவரி கொடுத்தார். இந்த முகவரியை பயன்படுத்தி மோகன் அக்கவுன்ட் தொடங்கினார். இந்நிலையில், ரமேஷ் ரெட்டி, “நீ துவங்கிய வங்கி கணக்கில் 2 கோடி போட்டுள்ளேன். அதை எடுத்து தா” என மோகனிடம் கூறினார்.

இதையடுத்து, மோகன் பலமுறை முயற்சித்தும் பணம் வரவில்லை. மேலும், இதுதொடர்பாக ரமேஷ் ரெட்டிக்கு தகவல் தெரிவித்தார்.    

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி ரமேஷ் ரெட்டி மீண்டும் போன் செய்து மோகனை ஆத்தூருக்கு வரச்சொன்னார். மோகன் அங்கு சென்றபோது காரில் பிரபாகரன் மற்றும் மேலும் புதிதாக 2 பேர் இருந்தனர். அப்போது, அவர்கள் தாங்கள் அனுப்பிய 40 லட்சம் டாலர் பணத்தை எடுத்துக்கொண்டு ஏமாற்றி விட்டதாக சொல்லி மோகனை மிரட்டினர். மோகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் நகைகளை அடகு வைத்து 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் கொடுத்தார். மேலும், 5 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் சிறுக சிறுக கொடுத்தார்.

இதையடுத்து அவர் தொடர்ந்து அந்த அக்கவுன்டில் இருந்து பணம் எடுக்க முயற்சித்தும் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகன் அடையார் மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில்  உள்ள சைபர் கிரைம் பிரிவில்  புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் கொடுத்த வலைதளங்கள் மற்றும் ஆப்ஸ்கள் அனைத்தையும் பரிசோதித்ததில் போலி என தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரன் மற்றும் ரமேஷ் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>