மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!!!... மதுரை அருகே விவசாயிகள் கறுப்பு கொடியுடன் போராட்டம்!!!

மதுரை:  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகள் நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது மதுரையில் வேளாண் மசோதாவை கண்டித்து விவசாயிகள் நிலத்தில் கறுப்பு கொடியுடன் வேலை செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் விவசாயிகள் கறுப்பு கொடியுடன் வழக்கமான வேலைகளில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களால் தங்களுக்கு எந்த வித பயனும் இல்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாகும். இதனால் புதிய வேளாண் மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இல்லையெனில் நாடு தழுவிய அளவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் வேளாண் சட்ட மசோதாவை அவசர சட்டமாக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாளைய தினம் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகளும் வருகிற 28ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்படத்தக்கது.

Related Stories: