திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு : விளை நிலத்தில் பரவிய கச்சாஎண்ணெய் ;1 ஏக்கர் சம்பா பயிர் நாசம்

திருவாரூர் :திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாய் உடைந்து விளை நிலத்தில் கச்சா எண்ணெய் பரவியது. இதில் நடப்பட்டு 30 நாட்களான ஒரு ஏக்கர் சம்பா பயிர் நாசமானது.காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் பல இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு எடுக்கப்படும் கச்சா எண்ணெய்  குழாய்கள் மூலமாக நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் என தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கச்சா எண்ணெய்யை கொண்டு செல்வதற்கான குழாய்கள் அனைத்தும் விவசாய நிலங்களில் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு அதன்மூலம் கச்சா எண்ணெய் வெளியேறி பாதிப்பு ஏற்படுவதும், அதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் இழப்பீடு வழங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. எனவே இந்த ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் பல  காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் திருவாரூர் அருகே எருக்காட்டூர் கிராமத்தில் விவசாயி தனசேகரன்(60) தனக்கு சொந்தமான வயலில் சம்பா சாகுபடி செய்துள்ளார். நேற்று இவரது வயலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கச்சா எண்ணெய் பாசன வயலில் பரவியதில் பயிர்கள் முழுவதும் கருகிய நிலையில் மாறியது.

இதுகுறித்து ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் குழாயினை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதே இடத்தில்  கடந்த 2 வருடங்களுக்கு முன்பும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் பரவி பயிர்கள் நாசமானது.இதுகுறித்து தனசேகரன் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே இடத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து 5 ஏக்கர் நெற்பயிர் நாசமானது.  அப்போது ஏற்பட்ட நஷ்ட ஈட்டையே இன்னும் ஓஎன்ஜிசி தரவில்லை. இப்போது மீண்டும் உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கர் நாசமாகிவிட்டது. எனக்கு ரூ.11லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக தராவிட்டால் நீதிமன்றத்தில் தடை வாங்கி விவசாய நிலத்தில் உள்ள எண்ணெய் குழாய்களை அப்புறப்படுத்துவேன் என்றார்.

Related Stories: