எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாமல் மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதா நிறைவேற்றம்: மாநிலங்களவையில் முதல் முறை

புதுடெல்லி: அத்தியாவசிய பொருட்கள் சட்ட மசோதா, வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா உட்பட 7 முக்கிய மசோதாக்கள், மூன்றரை மணி நேரத்தில் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன. வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், இடது சாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேற்று புறக்கணித்தன. எனவே, ஆளும் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம், அதிமுக, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை மட்டுமே நேற்று அவை அலுவலில் பங்கேற்றன. இதனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமலேயே நேற்று ஒரே நாளில் 7 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவை வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை.

* நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்:

இந்திய தொழில்நுட்ப கழக (திருத்த) மசோதா, கொள்ளை நோய்கள் (திருத்த) மசோதா, அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா, கம்பெனிகள் (திருத்த) மசோதா, வங்கி ஒழுங்குமுறை (திருத்த) சட்டம், தேசிய தடய அறிவியல் பல்கலை மசோதா மற்றும் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலை மசோதா.

Related Stories: