மூன்றாவது நாளாக கனமழை: வீட்டின் மீது மரம் விழுந்து 3 பேர் படுகாயம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. ஊட்டி அருகே வி.சி., காலனியில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் தந்தை, மகன் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 3வது நாளாக நேற்றும் மழை பெய்தது. ஊட்டி, மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக கடும் குளிர் நிலவுவதால் தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர் காரணமாக நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, முக்கூருத்தி, எமரால்டு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மின் உற்பத்திக்கு ஆதாரமான அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 5க்கும் மேற்பட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகேயுள்ள வி.சி., காலனியில் ஒரு வீட்டின் மீது மரம் வேருடன் சாய்ந்தது. இதில் அந்த வீடு முழுமையாக சேதமடைந்ததுடன், அங்கு தூங்கி கொண்டிருந்த மதியழகன்(48), இவரது மகன் சஞ்சய்(18) மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த பிரசாந்த்(23) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஊட்டி - மஞ்சூர் சாலையில் லவ்டேல் டிஎப்எல் பகுதியில் மரம் ஒன்று சாலையின் குறுக்காக விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்தன. உடனடியாக தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினார்கள். ஊட்டி - கூடலூர் சாலை யில் தலைக்குந்தா, சூட்டிங்மட்டம், பட்பயர் அருகே பாரதிநகர் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இவற்றை தீயணைப்புத்துறையினர் உடனுக்குடன் வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். கட்டபெட்டு உள்ளிட்ட இடங்களில் விழுந்த மரங்களும் அகற்றப்பட்டன. குன்னூர், கோத்தகிரி வட்டங்களில் மழை தாக்கம் சற்று குறைவாகவே உள்ளது.தொடர்ச்சியாக பலத்த காற்று வீசுவதால் மரங்கள் விழ வாய்ப்புள்ளது என்பதால் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மழை காரணமாக ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு அனைத்து அரசுத் துறைகளையும் மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தியுள்ளது. மழை மூன்றாவது நாளாக பெய்ததால் மலை காய்கறிகள் அழுக கூடிய சூழல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் மழையளவு மி.மீட்டரில்: ஊட்டி, கிளன்மார்கன் 8, நடுவட்டம் 20, குந்தா 28, அவலாஞ்சி 182, எமரால்டு 40, அப்பர்பவானி 119, பாலகொலா 23, கேத்தி 5, கூடலூர் 17, தேவாலா 105, அப்பர் கூடலூர், ஒவேலி, பாடந்தொரை 15, செருமுள்ளி 16, பந்தலூர் 57, சேரங்கோடு 43 என மொத்தம் 761.5 மி.மீ., மழை பெய்துள்ளது. ஊட்டி அருகே தலைக்குந்தா பகுதியில் நேற்று மதியம் உயர் மின் அழுத்த கோபுரம் மீது பலத்த காற்று காரணமாக நேற்று மரக்கிளைகள் விழுந்தன. இதனை தொடர்ந்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டு, மின்கோபுரத்தில் விழுந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.

மின்சாரம் துண்டிப்பு

கனமழையுடன் பலத்த காற்று வீசுவதால் பல இடங்களில் மரக்கிளைகள், மரங்கள் மின்கம்பங்கள் மீதும், மின் கம்பிகள் மீதும் விழுந்து மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் ஊட்டி புறநகர் பகுதிகள், லவ்டேல், செலவிப்நகர், முட்டிநாடு, ஊட்டி நகரின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டு இருளில் மூழ்கியுள்ளன. மின்வாரிய ஊழியர்கள் துரித கதியில் மின் விநியோகத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை 11 மணியளவில் ஊட்டி நகரில் மின் விநியோகம் சீரானது.

Related Stories: