திருடர்களை கண்காணிக்க வைத்த சிசிடிவி கேமராவில் பதிவாகின திருப்பதி கோயிலுக்கு செல்லும் சாலையில் கரடி, சிறுத்தைகள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் சாலையில் சிறுத்தைகள் மற்றும் கரடிகளின் நடமாட்டம் சிசிடிவி கேமராவில் பதிவாகிவுள்ளது. மேலும், அலாரத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.   உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வந்தனர். கொரோனாவால் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.  ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மட்டும் தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதனால், பக்தர்களின் கோவிந்தா  கோஷத்துடன் முழங்கியிருக்க கூடிய  திருமலை தற்போது அமைதியாக உள்ளது.

இதனால், இருள் சூழ்ந்த சில நிமிடங்களிலேயே வனவிலங்குகள் சாலையை கடந்துச்செல்கிறது. வழக்கமாக மான், கடமான், காட்டுப்பன்றி உள்ளிட்டவை சாலையை கடந்துச்செல்லும். ஆனால், கடந்த 6 மாதமாக சிறுத்தை, கரடி, நரி  உள்ளிட்டவை பக்தர்கள் நடமாட்டம் மிகுந்த ஜி.என்.சி சோதனைச்சாவடி, வெங்கடேஸ்வரா பக்தர்கள் ஓய்வறை, பத்மாவதி, கவுஸ்துபம், பக்தர்கள் ஓய்வறை, தர்மகிரி வேதபாட சாலை, பாபவிநாசம் சாலை ஆகிய இடங்களில் சுற்றி வருகிறது.

தேவஸ்தான அதிகாரிகள் இப்பகுதிகளில் மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் நேரத்தில் திருடர்களை கண்காணிப்பதற்காக வைத்திருந்த  சிசிடிவி கேமராக்களில் தற்போது வனவிலங்குகள் நடமாட்டம் தெளிவாக பதிவாகியுள்ளது. வனவிலங்குகள் வந்தால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் விதமாகவும், அலாரம் அடிக்க வைத்து அப்பகுதியில் செல்ல  வேண்டாம் என எச்சரிக்கை செய்யும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், வனவிலங்குகள் நடமாட்டமிகுந்த பகுதிகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் யாரும் தனியாக செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: