தூதரகம் மூலம் 17,000 கிலோ பேரீச்சம் பழங்கள் வருகை: கேரள சமூக நலத்துறைக்கு நோட்டீஸ்

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலம் 17 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழங்கள் விநியோகித்தது குறித்த விபரங்களை கேட்டு கேரள அரசுக்கு சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 17 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழங்கள் வந்தன. கடந்த மார்ச் மாதம் மதநூல்களும் கொண்டு வரப்பட்டன. இவை வந்த பார்சல்களில் தங்கம்  கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சுங்க இலாகா தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.

கேரளாவில் மாற்றுத்திறனாளிகள் படிக்கும் பள்ளிகளுக்கு விநியோகிக்க இந்த பேரீச்சம் பழங்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தலா 250 கிராம் என 40 ஆயிரம் மாணவர்களுக்கு இதை கொடுக்க தீர்மானித்ததாகவும் கூறப்பட்டது.  இந்த நிலையில் சுங்க இலாகா சார்பில் கேரள சமூக நலத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பேரீச்சம் பழங்கள் விநியோகிக்கப்பட்ட விபரங்கள் குறித்து வரும் 30ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை செயலாளர் பிஜூ பிரபாகர் கூறுகையில், பேரீச்சம் பழங்கள் இலவசமாக கிடைத்ததால், அவற்றை விநியோகித்தது தொடர்பான விபரங்கள் எங்களிடம் இல்லை. ஆனாலும் முடிந்த அளவு விபரங்களை சேகரிக்க  முடிவு செய்துள்ளோம் என்றார். மதநூல்கள் கொண்டு வரப்பட்டது தொடர்பாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சக ஊழியர்கள், டிரைவர்கள் ஆகியோரிடம் சுங்க இலாகா விசாரித்தது.

Related Stories: