பருவ நிலை மாற்றத்தால் அந்தமான் நிகோபர், மாலத்தீவு 20 ஆண்டுகளில் கடலில் மூழ்கும்; நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் திடுக். தகவல்

நெல்லை: பருவ நிலை மாற்றம் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அந்தமான் நிக்கோபர், மாலத்தீவுகள் 20 ஆண்டுகளில் மூழ்கி விடும் அபாயம் உள்ளதாக நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்தார். நெல்லை மண்டல வங்கக் கடல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் இணையவழிப் பயிலரங்கம், நேற்று காலை துவங்கியது. மதுரை பல்கலைக்கழக மக்கள் தொடர்பியல் பேராசிரியர் நாகரத்தினம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி பங்கேற்று பேசியதாவது: சுவாசித்தலும், ஒளிச்சேர்க்கையும் ஒன்றுடன் ஒன்று சமமானது. நெல்லை மாவட்டம் இயற்கையின் பிறப்பிடமாகும். இங்கு தாமிரபரணி பாய்வதால் 365 நாட்களும் தண்ணீர் கிடைக்கிறது. இங்குள்ள அணைகள் ஒரு போதும் வறண்டதில்லை. இதேபோல் உலகிலேயே  காற்றாலை மூலம் அதிக மின்சாரம் கிடைக்கும் பகுதியாக காவல்கிணறு திகழ்கிறது.

நெல்லை மாவட்டத்தில் ஐவகை நிலங்களும் அமைந்துள்ளன. குறிஞ்சி நிலமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியும், களக்காடு, முண்டந்துறை முல்லை நிலமாகவும், சேரன்மகாதேவி, வல்லநாடு, வைகுண்டம் பகுதிகள் மருத நிலமாகவும், கூடங்குளம், உவரி நெய்தல் நிலமாகவும், திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி பகுதிகள் பாலை நிலமாகவும் திகழ்கிறது. இந்தப் பெருமை வேறு எங்கும் இல்லை. பருவநிலை மாற்றம் காரணமாக பனி மலைகள் உருகுவதால் உலகம் முழுவதும் கடல் நீர்மட்டம் தற்போது உயர்ந்து வருகிறது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தலைநகரையே மாற்ற அந்த நாடு 7 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கி உள்ளது. சிங்கப்பூரில் கடல் நீர்மட்டம் உயர்வு காரணமாக சுவர் கட்ட 72 மில்லியன் டாலர் நிதியை அந்த நாடு ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் 20 ஆண்டுகளில் மூழ்கி விடும் அபாயம் உள்ளது. காலநிலை மாற்றத்தால் கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரித்து வருகிறது. மனிதர்கள் வாழ்வதற்காக ஏதாவது ஒன்றை அழித்து விடுகிறோம்.

எனவே இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஊடகங்களின் பணியாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பயிலரங்கை துவக்கி  வைத்துப் பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், கழிவுகள் மற்றும் மாசு அதிகரிப்பால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு கார்பன்டை  ஆக்சைடு அளவு அதிகரித்து வருகிறது. இதுதான் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த உலகத்தில் மனிதர்கள், எல்லோருக்கும் முதன்மையானவர் என நினைக்கிறோம். ஆனால், இன்று ஒரு சிறிய வைரஸ் உலகையே  ஆட்டிப் படைத்து வருகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் குறிப்பாக கிராமப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கூட்டு முயற்சியுடன் இணைந்து இந்த  கொரோனா பேரழிவில் இருந்து விரைவில் வெளியே வருவோம். இவ்வாறு அவர் பேசினார். பயிலரங்கில் டேராடூன் இந்திய வனவிலங்கு நிறுவன விஞ்ஞானி சிவகுமார், வங்கக் கடல் திட்ட நிபுணத்துவ ஆலோசகர் விவேகானந்தன் உள்ளிட்டோர்  பேசினர். இந்த இணையவழி பயிலரங்கிற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக மக்கள் தொடர்பியல் துறை ஏற்பாடு செய்திருந்தது.

Related Stories: