ஊரடங்கில் தளர்வுகள் வந்தும் விடியல் இல்லை; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மேட்டூர் அணை பகுதி மீனவர்கள்

மேட்டூர்: மேட்டூர் அணையை ஆதாரமாக கொண்டு கொண்டு வாழும் தங்கள் வாழ்க்கையை, கொரோனா ஊரடங்கு சீர்குலைத்து விட்டது என்று மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ளது மேட்டூர் அணை. மேட்டூர் நீர்த்தேக்கம் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு கொண்டது. மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் சுவை மிகுந்த பலவகையான மீன்கள் பிடிபடுகின்றன. கட்லா, ரோகு, மிர்கால். ஆரால், அரஞ்சான் திலேபி என்று இந்த பட்டியல் மிகவும் நீளமானது. மேட்டூர் அணையில் 2,100 மீனவர்களும், 2,100 மீனவர் உதவியாளர்களும் மீன்பிடி உரிமம் பெற்று மீன் பிடித்து வருகின்றனர். காவிரி கரைகளை தங்களின் வாழ்விடமாக கொண்டு அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி, மாசிலாபாளையம், சின்னமேட்டூர், கீரைக்காரனூர், கூனாண்டியூர் பகுதிகளிலும், ஏமனூர், நாகமரை, ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மீனவர்கள் முகாம்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

தங்களின் ஓட்டை பரிசல்களை கூடாரமாக்கி வலைகளை சுவர்களாக்கி, பரந்த வானமே கூரையாக, வாழ்க்கை பயணம் தொடர்கின்றனர். காவிரிக் கரையில் வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்தால், அவற்றிடமிருந்து உயிரைக் காக்க ஓடுவதும், மழை வந்தால் தங்களின் குழந்தைகளை நனையாமல் பாதுகாத்து  மரத்தடியில் குறுகி அமர்ந்தும் வாழ்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்த கொரோனா, அவர்களின் எதிர்தாலத்தையும் காவுவாங்கியுள்ளது. கடந்த 5 மாதங்களாக ஊரடங்கால் முகாம்களில் முடங்கிய மீனவர்கள், தங்களின் வலைகளையும் பரிசல்களையும் அடகு வைத்தும், விற்றும் வயிற்றுப்பசியை போக்கி வந்தனர். ஊரடங்கு தளர்வு வந்ததால் தங்களின் கஷ்டங்கள் நீங்கும் என எதிர்பார்த்த மீனவர்களுக்கு, ஏமாற்றமே எஞ்சியது. சொற்ப அளவில் பிடிபடும் மீன்களையும் மீனவர் கூட்டுறவு சங்கம் வாங்குவதில்லை. அருகில் உள்ள  ஊர்களில் விற்பனை செய்யச்சென்றாலும் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் மீன்களை வாங்க அஞ்சுகின்றனர். இதனால் சோற்றுக்கே திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது என்பது அவர்களின் குமுறலாக உள்ளது.  

இந்நிலையில், தற்போது மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தங்களின் ஓட்டை பரிசல்களில் அமைத்த கூடாரத்தில் மழைநீர் கொட்டுவதால், பொருட்களுடன் ஆடைகளும் நனைந்து, இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டதாக கண்ணீர் விடுகின்றனர். தங்களுக்கு முகாம்கள் அமைக்க மேட்டூர் மீன்வளத்துறை சார்பில், தார்பாய்கள் தருவதாக கூறினர். ஆனால் அது பலமாதங்களாக வெறும் சொல்லாக மட்டுமே உள்ளது என்பது மீனவர்களின் வேதனை. இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘அரசு அறிவித்த எந்த உதவிகளும், மேட்டூர் அணை மீனவர்களுக்கு கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. கொரோனாவும், அதனால் வந்த ஊரடங்கும் எங்கள் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததோடு, குழந்தைகளின்   எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடுமோ என்ற கவலையே தற்போது பிரதானமாக உள்ளது. எனவே, மேட்டூர் அணையில் மீன் வளத்தை பெருக்க அரசு உரிய  நடவடிக்கை எடுப்பதோடு, எங்களுக்கான நிவாரண உதவிகளையும் காலம் கடத்தாமல் வழங்க வேண்டும். அப்போது தான், காவிரிக்கரையே கதியாக கிடக்கும் எங்கள் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை பிறக்கும்,’’ என்றனர்.

Related Stories: