மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்...!! 3-வது மொழியை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம்; மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கையே பின்பற்றபடும் என மக்களவையில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 3-வது மொழி எது என்பதை மாநில அரசே முடிவு செய்யும் எனவும் விளக்கம் அளித்துள்ளது. மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. புதிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும் சர்ச்சையையும் கேள்விகளையும் எழுப்பியது.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும் கல்வியாளர்களும் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். 39 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றி அமைக்கப்படும் இந்த கல்விக் கொள்கை, சிறந்த மாணவர்களை உருவாக்கும் என கூறி வருகிறது. ஆனால், இந்த புதியக் கல்விக் கொள்கை மும்மொழி கல்வியை வலியுறுத்துவதால் இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அண்மையில் இது குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் எப்போதுமே இருமொழி கொள்கை தான் தொடரும் என கூறினார். அதே போல எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், நாங்கள் இந்திக்கு எதிரி அல்ல.

இந்தி திணிப்புக்கு தான் எதிரி என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என தமிழக அரசு அறிவித்தது குறித்து அவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும், மூன்றாவது மொழியாக எதை கற்க வேண்டும் என்பது மாநிலங்கள் மற்றும் மாணவர்களின் முடிவு என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>