இ-வாகனம் சார்ஜிங் ஸ்டேஷன் 2 வாரத்தில் இடங்கள் தேர்வு செய்ய முடிவு

புதுடெல்லி : மின்சார பேட்டரியில் இயங்கும் வாகனங்களை (இ-வாகனம்) சார்ஜிங் செய்யும் மையங்களை அமைப்பதற்கான  இடங்களை மத்திய, மாநில அரசுகள் அடுத்த 2 வாரத்தில் தேர்வு செய்யும் என டெல்லி அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. டெல்லி சாலைகளில் விரையும் வாகனங்களில் 25 சதவீதம் இ-வாகனமாக 2025ம் ஆண்டில் அமையும் என இ-வாகன திட்டம் அறிவித்த போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில மாதங்களுக்கு முன் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் இ-வாகன கொள்கை குறித்த அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இ-வாகனத்திற்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்த அறிவிப்பை போக்குவரத்து துறை கடந்த மாதம் வெளியிட்டது.

இந்நிலையில், இ-வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்வது குறித்த முதல் ஆலோசனை கூட்டத்தை ஆம் ஆத்மி அரசு வியாழக்கிழமை நடத்தியது. மாநில அரசின் டயலாக் மற்றும் டெவலப்மென்ட் ஆணையத்தின் துணை தலைவர் ஜாஸ்மின் ஷா தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் மாநகராட்சி, பொதுப்பணி துறை, போக்குவரத்து, மாநில போக்குவரத்து பிரிவு, மெட்ரோ ரயில் நிர்வாகம், டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஆகிய மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் உள்பட இ-வாகனம் தொடர்புடைய வேறு பல அரசு துறைகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்குப் பின்னர் ஜா கூறுகையில், ‘‘இ-வாகன அமலாக்கம் தொடர்புள்ள அனைத்து துறையினரும் தங்களது அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இ-வாகனங்களை சார்ஜிங் செய்யும் இடங்களை அடுத்த 2 வாரத்தில் தேர்வு செய்து முடிக்க வேண்டும்’’, என உத்தரவிட்டார். இது பற்றி ஜா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: ஒரே மாதிரி வடிவமைப்பிலான மையங்கள், பட்டியலில் இடம் பிடித்த 200 இடங்களில் கட்டப்பட்டு, இ-வாகன பயனாளர்களுக்கு சார்ஜிங் சேவை வழங்கப்படும். இ-வாகனங்களுக்கு மானியம் வழங்கும் நிதியையும் அரசு விரைவில் ஒதுக்கி அறிவிக்கும். டிஸ்காம்கள், இஇஎஸ்எல், டெல்லி மெட்ரோ, டெல்லி டிரான்ஸ்கோ, என்டிஎம்சி, இடிஎம்சி, எஸ்டிஎம்சி மற்றும் புதுடெல்லி நகராட்சி ஆகியோர் ஆலோசனையின் போது தெரிவித்த முக்கிய அம்சங்களை அரசு தீவிரமாக பரிசீலிக்கும்.

சார்ஜிங் மையங்களில் மெதுவாக மற்றும் விரைவாக என இருவகை சார்ஜிங் வசதிகள் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு கிடைக்கும். பேட்டரிகள் கிடைக்கும் கடைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளாக பார்த்து சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும். சார்ஜிங் மையம் அமைக்கும் இடங்கள் இறுதி செய்யப்பட்டதும், அந்த இடங்களில் டெல்லி டிரான்ஸ்கோ சார்பில் உள்கட்டமைப்பு பணிகள் தொடங்கப்படும். தேர்வு செய்யப்படும் இடங்கள் தவிர ஷாப்பிங் மால், அலுவலக வளாகங்கள், தொகுப்பு வீட்டு வசதி குடியிருப்புகள், ஓட்டல்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பகுதிகளிலும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க ஆலோசித்து உள்ளோம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Related Stories: