இரண்டாம் காலாண்டில் முன்கூட்டிய வரி வசூல் 25.2% சரிந்தது: வருமான வரித்துறை தகவல்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில், முன்கூட்டிய வரி 1,59,057 கோடி  வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 25.2% குறைவு என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அரசுக்கு வரி வருவாய்தான் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஆனால்,  கொரோனா ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் கடுமையாக சரிந்து விட்டது. ஒட்டுமொத்த அளவில் நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டில் மத்திய அரசுக்கு 2.53 லட்சம் கோடி மட்டுமே வரி வருவாய் கிடைத்துள்ளது. இதில் முன்கூட்டிய வரி வசூலும் அடங்கும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறின. இந்நிலையில், முன்கூட்டிய வரி வசூல் விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:  நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் கடந்த 15ம் தேதி வரை முன்கூட்டிய வரியாக 1,59,057 கோடி வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 25.2 சதவீதம் குறைவு. அதேநேரத்தில், ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் வசூலானதை விட 76 சதவீதம் உயர்ந்துள்ளது. முதல் காலாண்டில் முன்கூட்டிய வரியாக 11,714 கோடி மட்டுமே வசூலானது.  கடந்த ஆண்டு இதே காலாண்டில் செப்டம்பர் 15ம் தேதி வரை 2,12,889 கோடி வசூலானது. இதுவும் அதற்கு முந்தைய நிதியாண்டை விட குறைவுதான்.  நடப்பு நிதியாண்டில் வசூலானதில் நிறுவனங்கள் 1,29,619.6 கோடி செலுத்தியுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 27.3 சதவீதம் குறைவு. இதுபோல் தனிநபர் வரி 29,437.5 கோடி வசூலாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் குறைவு. இருப்பினும டிடிஎஸ் 1,38,605.2 கோடி வசூலாகியுள்ளது என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: