கலெக்டர் உத்தரவு எதிரொலி: அனுமதியின்றி துவங்கிய ஈரோடு மாட்டு சந்தை மூடல்

ஈரோடு: மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி ஈரோட்டில் இன்று காலை துவங்கிய மாட்டுசந்தை கலெக்டர் உத்தரவின் பேரில் உடனடியாக மூடப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன், வியாழன் நாட்களில் மாட்டு சந்தை நடக்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மகாராஸ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு மாடுகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி பின்னர் மாட்டு சந்தை மூடப்பட்டது. விரைவில் கால்நடை சந்தைகளை திறக்க அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், கருங்கல்பாளையம் மாட்டு சந்தையின் உரிமம் காலாவதியானதால் நேற்று முன்தினம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் உரிமத்தை புதுப்பித்துக்கொடுக்க கோரி மாட்டு சந்தை ஏலதாரர் விண்ணப்பம் வழங்கி இருந்தார். இதற்கான உரிமம் புதுப்பித்து கொடுத்தநிலையில், இன்று காலை மாட்டு சந்தை திறக்கப்பட்டு ஈரோடு, அந்தியூர், கோபி போன்ற பகுதியில் இருந்து 40க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. தமிழகத்தின் சில மாவட்ட வியாபாரிகள் மற்றும் வெளிமாநில வியாபாரிகளும் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகம் சந்தைகள் நடத்த அனுமதி வழங்காத நிலையில்,

ஈரோட்டில் மாட்டு சந்தை நடத்தப்படுவதாக கலெக்டர் கதிரவனுக்கு புகார் சென்றதையடுத்து ஈரோடு தாசில்தார் பரிமளாதேவியை அனுப்பி சந்தையை மூட உத்தரவிட்டார். இதனால் சந்தை உடனடியாக மூடப்பட்டது. இது குறித்து கலெக்டர் கதிரவன் கூறுகையில், ‘‘கருங்கல்பாளையம் சந்தையின் உரிமத்தை மட்டுமே, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் புதுப்பித்துள்ளார். மாவட்ட அளவில் எந்த சந்தையும் செயல்பட அனுமதி வழங்கவில்லை. தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்படுவதால் வரும் 1ம் தேதி முதல் சந்தை திறக்க வழிமுறைகள் தெரிவித்து, அனுமதி வழங்கப்படும். கருங்கல்பாளையம் சந்தையை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: