பாங்காங் ஏரியில் உள்பட எல்லையில் உள்ள படைகளை சீன ராணுவம் உடனே வாபஸ் பெற வேண்டும்: அனுராக் ஸ்ரீவாஸ்தவா

டெல்லி: பாங்காங் ஏரியில் உள்பட எல்லையில் உள்ள படைகளை சீன ராணுவம் உடனே வாபஸ் பெற வேண்டும் என  வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார். இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாகப் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்தனர். இந்திய வீரர்கள் பதிலடியில் சீன வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இதனை அந்நாட்டு அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இருப்பினும் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் படைகளையும், ஆயுதங்களையும் குவித்து வருகின்றன. மறுபுறம் எல்லையில் அமைதியை நிலைநாட்ட இருநாட்டு தரப்பிலும், பலகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளில் பெருமளவு முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையில், அருணாசலபிரதேசத்தில் உள்ள எல்லையோர கிராமத்தில் வேட்டைக்கு சென்ற 5 பேரை சீன ராணுவம் கடத்தி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

இதற்கிடையில், இந்தியா-சீனா இடையே மோதலுக்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படும் பகுதிகளில் லடாக்கின் லே-யில் உள்ள பாங்காங் ஏரி பகுதியும் ஒன்று. இரு நாட்டு எல்லைகளுக்கும் முக்கிய இடமாக உள்ள இந்த ஏரிப்பகுதியில் இந்திய-சீன படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிப்பகுதியை சுற்றியுள்ள மலைத்தொடர்களில் இரு நாடுகளும் பல்வேறு ராணுவ நிலைகளை அமைத்துள்ளது. பாங்காங் ஏரி பகுதியை சுற்றி பிங்கர் 1 முதல் பிங்கர் 14 வரை பல்வேறு நிலைகள் உள்ளன. இதற்கிடையில், பாங்காங் ஏரியின் தெற்கு கரையோரத்தில் சீன வீரர்களின் பிங்கர் 4 (விரல் 4) நிலை அமைந்துள்ளது.

இந்த பகுதிகளில் சீன படையினர் கடந்த ஏப்ரல்-மே மாதங்களின் போது அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் உள்ள மலைத்தொடரில் தனது நிலைகளை அமைத்துள்ளனர். அந்த இடத்தை விட்டு சீன படைகள் வெளியேற வேண்டும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிங்கர் 4 பகுதியில் உள்ள மலைத்தொடரில் தொடர்ந்து தனது நிலைகளை அமைத்து வந்தனர். இந்நிலையில், பிங்கர் 4 பகுதியில் சீன படையினர் ஆக்கிரமித்துள்ள மலைத்தொடரை விட மிகவும் உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்தியா கைப்பற்றியுள்ள மலைத்தொடர் சீன ராணுவ நிலைகளுக்கு மிக அருகிலும் மிக உயரமாகவும் உள்ளது.

இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை கடந்த மாதம் இறுதியில் தொடங்கப்பட்டதாகவும், தற்போது பிங்கர் 4 பகுதியின் மிகவும் உயரமான மலைத்தொடர் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ள பகுதியில் இருந்து சீன ராணுவத்தின் நிலைகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் தெளிவாக காணமுடியும். இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பிங்கர் 4 பகுதியில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவிகரமாக இருக்கும். இதற்கிடையில் கடந்த நில நாட்களுக்கு முன்பு பாங்காங் ஏரியின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள முக்கிய நிலைகளை கைப்பற்ற சீனா முயற்சித்தபோது அதை இந்திய வீரர்கள் முறியடித்தனர்.

இருப்பினும் பாங்காங் ஏரியில் எல்லையில் படைகளை சீன ராணுவம் குவித்து வந்தது. இந்நிலையில் பாங்காங் ஏரியில் உள்பட எல்லையில் உள்ள படைகளை சீன ராணுவம் உடனே வாபஸ் பெற வேண்டும் என  வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

Related Stories: