நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்கு சுற்றுலா பிரிவில் குறைந்த அளவிலே இ-பாஸ் அனுமதி

ஊட்டி: நீலகிரி  மாவட்டத்திற்கு வர சுற்றுலா பிரிவில் இ-பாஸ் குறைந்த அளவிலேயே  வழங்கப்படுவதால் ஊட்டியில் பூங்காக்கள் திறக்கப்பட்டும் சுற்றுலா பயணிகள்  வருகை குறைவாகவே உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்த்தபட்டு கடந்த 9ம் தேதி முதல் நீலகிரியில் உள்ள  தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் மட்டும்  திறக்க  தமிழக அரசு  அனுமதியளித்தது. இதனைத்தொடர்ந்து படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தளங்கள்  திறக்கப்படவில்லை. இதனிடையே கடந்த 5 மாதமாக சுற்றுலா பயணிகள் வராத நிலையில்,  சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை சரி செய்ய  சுற்றுலா பயணிகள் வருகைக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும்  கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று நீலகிரி மாவட்டத்திற்கு வந்து செல்ல  நடைமுறையில் உள்ள இ-பாஸ் டூரிசம் என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டு இதனை  பயன்படுத்தி விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு  வருகிறது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள ஓட்டல்கள், ரிசார்ட் உரிமையாளர்கள்  மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த சூழலில் டூரிசம் என்ற பிரிவில்  விண்ணப்பித்தாலும், நாள் ஒன்றுக்கு சுமார் 100 முதல் 200 இ-பாஸ் மட்டுமே  மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர உள்ளூர் மக்களும்  பூங்காக்களை பார்வையிட பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

பூங்காக்கள் திறக்கப்பட்டு  நேற்றுடன் 8 நாட்கள் கடந்த நிலையில், தாவரவியல் பூங்கா, சிம்ஸ்  பூங்கா உட்பட 7 பூங்காக்களுக்கு கடந்த செவ்வாய்கிழமை வரை 2962 பேர் மட்டுமே  வந்து சென்றுள்ளனர். தாவரவியல் பூங்காவிற்கு கடந்த ஆண்டுகளில்  இரண்டாவது சீசனின்போது வார இறுதி நாட்களில் குறைந்தபட்சம் 10 ஆயிரம்  சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் கடந்த 7 நாட்களில்  பூங்காவிற்கு 1227 பேர் மட்டுமே வந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு  சராசரியாக 175 பேர் மட்டுமே வந்துள்ளனர்.

தற்போது இ-பாஸ் பெற்று  வரும் சுற்றுலா பயணிகளும் காலையில் ஊட்டிக்கு வந்து மாலை வரை பூங்காக்களை  பார்வையிட்ட பின்னர் மாலையில் திரும்பி விடுகின்றனர். அவர்கள் யாரும் இங்கு  ஒட்டல்கள், ரிசார்ட்களில் அறைகள் எடுத்து தங்குவதில்லை. இதனால் ஓட்டல்கள்,  ரிசார்ட்கள் திறந்தும் எவ்வித பலனும் இல்லை. பூங்காக்களுக்கு மிக குறைந்த  அளவிலான சுற்றுலா பயணிகளை வருவதால், இவற்றின் அருகில் கடை வைத்துள்ள  சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டூரிசம் பிரிவில் குறைந்த  அளவிலான இ-பாஸ் மட்டுமே வழங்கப்படுவதால், பூங்காக்கள் திறந்தும் சுற்றுலா  தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு எவ்வித வருவாயும் இல்லை. இதன் காரணமாக  சுற்றுலா அனுமதியை நம்பி ஓட்டல்களை திறந்தவர்களும் போதிய வருவாய் இன்றி  மீண்டும் அவற்றை தற்காலிகமாக மூடியுள்ளனர். எனவே இப்பிரிவில் சுற்றுலா  பயணிகளுக்கு இ-பாஸ் வழங்குவதை மாவட்ட நிர்வாகம் அதிகரிக்க வேண்டும் என  கோரிக்கை வலுத்துள்ளது.

Related Stories: