போலீஸ் பிடியில் இருந்தபோது ஆம்புலன்சுக்கு தீ வைத்து எரித்து தப்பி ஓடிய ரவுடி: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோலை சேர்ந்தவர் சுரேஷ், பிரபல ரவுடி. இவர் கடந்த சில நாட்களாக 108 ஆம்புலன்சுக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்து வந்தார். புகாரின்பேரில், போலீசார், ரவுடி சுரேசை நேற்று முன்தினம் இரவு கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் காவல் நிலையத்திலிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். இதை போலீசார் கண்டித்தபோது திடீரென உடைந்த கண்ணாடி துண்டை எடுத்து தனது கையை கிழித்துக் கொண்டார். கையில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்த சுரேசை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓங்கோல் அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச்சென்றனர்.

பத்மாவதி டவர்ஸ் அருகே சென்றபோது சுரேஷ், தன்னிடமிருந்த தீப்பெட்டி மூலம் ஆம்புலன்சுக்கு தீ வைத்தார். அப்போது, ஆம்புலன்சில் இருந்த கிருமிநாசினியில் பற்றிய தீ ஆம்புலன்ஸ் முழுவதும் பற்றி எரிந்தது. போலீசார் வெளியில் குதித்து தப்பினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுரேஷ் தப்பியோடினார். போலீசார் விரட்டிச்சென்று ரவுடியை சுற்றி வளைத்து பிடித்து மருத்துவமனையில் சேர்த்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ஆம்புலன்ஸ் முற்றிலும் எரிந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: