லடாக்கில் அத்துமீறிய சீனாவை எச்சரித்து 20 நாட்களில் 3 முறை எல்லையில் துப்பாக்கி சூடு: 100-200 சுற்றுகள் சுடப்பட்டதாக பரபரப்பு தகவல்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் கடந்த 20 நாளில் 3 முறை துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு முன் நடந்த துப்பாக்கி சூட்டில் 100-200 சுற்றுகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்திய-சீன எல்லையான கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் தொடங்கி பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. கடந்த 10ம் தேதி மாஸ்கோவில் நடந்த ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு சென்ற மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு துறை அமைசச்ர் வாங் யீ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பதற்றத்தை தணிக்க 5 முக்கிய அம்சங்கள் கொண்ட கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்த சந்திப்புக்கு முன்னதாக கடந்த 29-30ம் தேதி இரவில், எல்லை தாண்டி சீன ராணுவத்தை எச்சரித்து இந்திய படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது இரு தரப்பில் சுமார் 100-200 சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உறுதி படுத்தி உள்ளார். மேலும், கடந்த 20 நாட்களில் கிழக்கு லடாக்கில் மூன்று முறை துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. பாங்காக் ஏரியில் முதல் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக கடந்த 7ம் தேதி முக்பாரி பகுதியில் மற்றொரு துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

பின்னர் அடுத்த நாள், 8ம் தேதி பாங்காங் ஏரியின் வடக்கு கரைக்குஅருகே சீன வீரர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால் இருதரப்பு வீரர்களுக்கும் எச்சரிக்கை தரும் வகையில் துப்பாக்கி சூடு நடத்திக்கொண்டனர் என்கின்றனர் ராணுவ உயர் அதிகாரிகள். பாங்காங் ஏரியின் வடக்கு பகுதியில் இந்திய வீரர்கள் மலை மீது இருந்து சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க முகாம் அமைப்பதற்காக தங்களது நிலைகளை விரிவுபடுத்த முயன்றபோது இந்த சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகின்றது. 45 ஆண்டுகளுக்கு பின் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இத்தகைய துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளன.

* ஆயுதங்கள் குவிப்பு

கிழக்கு லடாக்கில் இந்தியாவும், சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு படைகளை குவித்து வருகின்றன. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சீனா எல்லையில் இதுவரை 52ஆயிரம் வீரர்களை குவித்துள்ளது. இதில் 10 ஆயிரம் வீரர்கள் பாங்காங்கின் தெற்கு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர் கடந்த ஆகஸ்டில் 35ஆக இருந்த பட்டாலியன் எண்ணிக்கை 50ஆகி உள்ளது. ஒவ்வொரு பட்டாலியனிலும் சுமார் 1000 முதல் 1200 வீரர்கள் இடம்பெற்று உள்ளனர். சீன நடவடிக்கைக்கு எதிராக இந்திய தரப்பிலும் வீரர்களும், ஆயுதங்களும் குவிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு லடாக்கில் போபர்ஸ் இலகுரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், இந்தியா தனது துருப்புகளை முழு உஷார் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. போபர்ஸ் இலகுரக பீரங்கிகளால், தாழ்வான மற்றும் அதிர் உயர் இலக்குகளை குறிவைத்து எளிதாக தாக்க இயலும். மேலும், இந்த பீரங்கிகளை, ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு, நகர்த்துவதும் எளிது.

* குளிர்காலத்திலும் போரிட தயார்

இந்திய ராணுவத்திடம் போதுமான ஆயுதங்கள் இல்லை, அவர்களால் குளிர்காலத்தில் திறம்பட செயல்பட முடியாது என சீனாவின் குளோபல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து ராணுவத்தின் வடக்கு பிராந்திய தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இது அறியாமையின் சிறந்த உதாரணம். கிழக்கு லடாக்கில் குளிர்காலத்திலும் இந்திய ராணுவம் திறம்பட செயல்பட முடியும். அதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குளிர் காலத்திலும் முழு அளவிலான போரை நடத்தும் வல்லமை உள்ளது. உலகின் மிக உயரமான சியாச்சின் போர்க்கள அனுபவத்தையும் இந்தியா பெற்றுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: