செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் பெயரில் போலியாக விண்ணப்பித்து ரூ.35 லட்சம் மோசடி: உளுந்தூர்பேட்டை இளம்பெண் கைது; பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு

செங்கல்பட்டு: பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்து, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் பெயரில் போலியாக விண்ணப்பித்து ரூ.35 லட்சம் மோசடி செய்த உளுந்தூர்பேட்டை இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஊக்க நிதியுதவியாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என 3 தவணைகளில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழு வதும் விவசாயிகள் பெயரில், உரிய தகுதியில்லாத ஏராளமானோர் முறைகேடாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தன. இவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், இவர்களது வங்கி கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்ட பணத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில், டெல்டா மாவட்டங்களாக நாகப்பட்டினம், கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரிக்க மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி லலிதா (35). அதே பகுதியில் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். ஆன்லைன் மூலம் லலிதா, செங்கல்பட்டு மாவட்டத்தின் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாக்களில் 350 பேருக்கு பிரதமரின் கிசான் திட்டத்தில் போலியாக விண்ணப்பித்து ரூ.35 லட்சம் மோசடி செய்தது தெரிவந்தது.

இதையடுத்து சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி தலைமையில் தனிப்படை போலீசார், அவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர், செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். லலிதாவை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.2 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கலெக்டர் உத்தரவின் பேரில் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்து மோசடியில் ஈடுபட்டதாக, நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில், பிரவுசிங் சென்டர் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: