மயிலாடுதுறை கோயிலில் கொள்ளை போனது லண்டனில் விற்க முயன்ற 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு: தமிழகம் கொண்டு வர நடவடிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ராஜகோபால பெருமாள் கோயிலில் கொள்ளை போன 3 ஐம்பொன் சுவாமி சிலைகள் லண்டனில் இணைய தளம் மூலம் விற்க முயன்றபோது சிக்கியது.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயில் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமன் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் 1978ல் கொள்ளை போனது. இதில் ராமர் மற்றும் லட்சுமணர் சிலைகள் தலா 30கிலோவும், சீதை சிலை 25 கிலோவும், அனுமர் சிலை 15 கிலோவும் எடைகொண்டவை.  இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3 பேரை 1988ல் கைது செய்தனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் சிலைகள் மீட்பு பணிக்குழு நடத்தும் விஜயகுமாருக்கு ஒரு வாரத்துக்கு முன்பு லண்டனில் உள்ள டீலர் ஒருவர், சிலைகள் விற்பனைக்கு உள்ளதாக இணையதளத்தில் தெரிவித்துள்ளார். இதில் தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலைகள் இருந்ததால் தமிழக சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அவர் தகவல் அனுப்பினார். அவை அனந்தமங்கலம் கோயிலில் திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா ஐம்பொன் சிலைகள் என உறுதி செய்யப்பட்டு அதற்கான ஆதாரங்களை  பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர். இதையடுத்து, அச்சிலைகள் மீட்கப்பட்டன. அவற்றை தமிழகத்துக்கு எடுத்து வரும் முயற்சியில் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். 15 கிலோ எடைகொண்ட ஆஞ்சநேயர்சிலை மட்டும் கிடைக்கவில்லை.

Related Stories: