திருச்சியில் இருந்து பெற்றோர் வர இயலாததால் காவல் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய இன்ஸ்பெக்டர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில், பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும், திருச்சி கோட்டூர் பகுதியைச் சேர்ந்த மீரா என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு பெற்றோர்களால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. விஜயகுமார் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம் நரணிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மீரா பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இருவரும் பர்கூர் பகுதியில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கி பணிக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பெண்போலீஸ் மீரா கர்ப்பமானார். கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் மீராவுக்கு, வளைகாப்பு செய்ய திருச்சியிலிருந்து பெற்றோர்களால் மீராவின் வீட்டிற்கு வர இயலவில்லை. பர்கூர் காவல் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரியும் மீரா எப்போதும் கலகலப்பாகவும், சுறுசுறுப்புடன் இருப்பார். ஆனால் கடந்த சில நாட்களாக சோகமாக இருப்பதை கண்ட இன்ஸ்பெக்டர் கற்பகம், மீராவை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது தான் தனக்கு வளைகாப்பு செய்ய பெற்றோர்கள் வரவில்லை என்ற ஏக்கம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுதுது போலீஸ் நிலையத்திலேயே பிரமாண்டமாக 5 வகை சாதம் மற்றும் 5 தட்டுகளில் சீர்வரிசை, இனிப்பு, காரம் என அசத்தலாக மீரா மற்றும் அவரது கணவர் விஜயகுமாரை அழைத்து வந்து, வீட்டில் பெற்றோர்கள் செய்யும் வளைகாப்பு போல இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில், வைளகாப்பு நடத்தப்பட்டது. இதில் தலைமை காவலர்கள் மகாலட்சுமி, தனலட்சுமி, கிருஷ்ணவேணி, சுமதி, போலீசார் கலைராணி, நிர்மலா, நித்யா, நசீபா, மகேஸ்வரி ஆகியோர் புடைசூழ கலந்துெகாண்டு வளையலிட்டு வளைகாப்பு நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தினர். கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்கள் இன்றி வளைகாப்பு செய்ய இயலாமல் சோகத்துடன் இருந்த பெண்போலீசுக்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சக காவலர்கள் போலீஸ் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்தியது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது. இது குறித்து தகவல் அறிந்தவர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு பாராட்டி வருகின்றனர்.

Related Stories: