112 வது பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: அண்ணாவின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. திமுக சார்பில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டம் முன்புறம் உள்ள அண்ணா சிலை மலர்கள், கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8 மணியளவில் திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார்.முன்னதாக திமுக தொண்டர் அணியினரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.

தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலைக்கும், கலைஞர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் எ.வ.வேலு, மா. சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு, தலைமை நிலைய செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி முருகன், வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம்,

வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி மற்றும் கே.கே.நகர் தனசேகர், பகுதி செயலாளர் மா.பா.அன்பு துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல தமிழகம் முழுவதும் திமுகவினர் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மாநில சுயாட்சி தீபத்தை எந்நாளும் காப்போம்

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, முகநூல் வழியாக மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தி: ‘வீழ்ந்து கிடந்த தமிழினத்தை தனது பேச்சால், எழுத்தால், செயலால் எழுச்சி பெற வைத்த அண்ணா பிறந்தநாள் இன்று. அவர் ஊட்டிய இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி ஆகிய 3 கொள்கை தீபங்களை எந்நாளும் காப்போம். அவர் வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை எந்நாளும் கடைப்பிடிப்போம். அண்ணா வாழ்கிறார். வாழ்விப்பார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: