வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்த ‘கொரோனா’ வறுமை கணவர் இறந்ததால் மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை: மற்றொரு மகள் உயிர் பிழைத்தார்; நாகர்கோவிலில் உருக்கமான சம்பவம்

சுசீந்திரம்: நாகர்கோவிலில் கணவர் இறந்த அதிர்ச்சியில், பெண் ஒருவர் தனது மகளுடன் குளத்தில் விழுந்து தற்கொலை செய்தார். மற்றொரு மகள் உயிருடன் மீட்கப்பட்டார். நாகர்கோவில் ஒழுகினசேரி சந்தன மாரியம்மன் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வடிவேல்முருகன் (78). தச்சு தொழிலாளி. இவரது மனைவி பங்கஜம் (67). இவர்களுக்கு மைதிலி என்ற சச்சு (47), மாலா (46) ஆகிய மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகவில்லை. இவர்களின் குடும்பம் வறுமையில் இருந்தது. வடிவேல்முருகன்  வேலைக்கு சென்று சம்பாதித்து வரும் பணத்தில்தான் குடும்பம் நடந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வடிவேல்முருகனுக்கு வேலை போனது. மேலும், வடிவேல்முருகனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த புண் ஆறாமல் இருந்ததால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு வடிவேல்முருகன் திடீரென உயிரிழந்தார். உடனே, ‘இனி உதவ யாரும் இல்லை’ என முடிவு செய்த அவர்கள், தற்கொலை செய்ய முடிவெடுத்தனர். வடிவேல்முருகனின் உடலை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, தனது இரு மகள்களுடன் பங்கஜம், சுசீந்திரம் நோக்கி நடந்து சென்றார். நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர்கள் சுசீந்திரம்-நல்லூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே வயலுக்கு வந்த விவசாயி ஒருவரிடம், அருகில் ஏதாவது குளம் உள்ளதா? என கேட்டுள்ளனர். அவர் எதற்கு என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் வேகமாக நடந்துள்ளனர்.

பின்னர், நல்லூர் அருகே இளையநயினார் குளத்தை பார்த்தனர். சிறிதுநேரத்தில், கைகளை துணியால் கட்டிக்ெகாண்டு ஒன்றாக குளத்துக்குள் குதித்தனர். இதில் பங்கஜமும், மாலாவும் இறந்தனர். மைதிலி மட்டும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தார். அதிகாலை 5.30 மணியளவில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்து சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து, மைதிலியை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், பங்கஜம், மாலா உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின், சிகிச்சையில் இருந்த மைதிலியிடம் விசாரித்தபோது, மேற்கண்ட தகவல்களை கூறினார். அதன்பின், நாகர்கோவிலில் வீட்டுக்குள் கிடந்த வடிவேல்முருகன் உடலையும் மீட்டனர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: