தன்பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை...!! என்றும் நமது சமூகம் அதை ஏற்காது; டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

டெல்லி: இந்தியாவின் சட்ட அமைப்புகளும், சமூக மாண்புகளும் ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிப்பதில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தன்பாலின சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்களின் பதிவுத் திருமணத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தன்பாலின சேர்க்கை உறவை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அங்கீகரித்துள்ளது என்றும் அவர்களின் திருமணத்தை பதிவு செய்ய மறுப்பது சமத்துவத்தையும் அவர்களின் வாழ்வுரிமையையும் புறக்கணிப்பதாகும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் தன்பாலின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்த அறிக்கையில், தன்பாலின சேர்க்கையாளர்கள் திருமணத்தை அனுமதிக்கவோ அங்கீகரிக்கவோ கூடாது. நமது சட்டம், சமூகம், கலாச்சார மாண்புகள் அதை அங்கீகரிக்காது. 1956-ம் ஆண்டில் இந்து திருமண சட்ட விதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரு ஆணோ, பெண்ணோ தடை செய்யப்பட்ட உறவு முறைகளில் திருமணம் செய்ய முடியாது.

தன்பாலின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளித்தால் ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளுக்கு அது முரணாக இருக்கும். மேலும், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பில் தன்பாலின சேர்க்கை கிரிமினல் குற்றமாகாது என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறது. இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லவில்லை’’ என கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனுதாரரின் வழக்கறிஞரிடம், அவரது மனு தொடர்பான உண்மைகளை தாக்கல் செய்யுமாறும் அல்லது தன்பாலின சேர்க்கையாளர் திருமணத்துக்கு பதிவு மறுக்கப்பட்டதால் யார் யார் பாதிக்கப்பட் டுள்ளனர் என்ற விவரத்தை தெரிவிக்குமாறும் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: