ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது முக்கிய அரசியல் பிரமுகரிடம் சொப்னா போனில் பேசினார்? கேரள அமைச்சரும் வந்து சென்றதால் சந்தேகம்

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சொப்னா ஒரு நர்சின் போனில் பேசிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் முக்கிய அரசியல் பிரமுகரிடம் பேசியதாக சந்தேகம் எழுந்துள்ளது. கேரளாவை பரபரப்புக்கு உள்ளாக்கிய தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா தற்போது திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 நாள் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

மன இறுக்கத்தால் லேசான பிரச்னை ஏற்பட்டது என்றும், குறிப்பிடும்படியாக வேறு நோய்கள், பாதிப்பு எதுவும் இல்லை என்றும் டாக்டர்கள் கூறினர். இந்த நிலையில் ெசாப்னாவுக்கு நேற்று முன்தினம் இரவு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமீஸுக்கும் நேற்று முன்தினம் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. அவர் இதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சொப்னா முதலில் நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒரு நர்ஸின் செல்போனில் இருந்து யாரையோ அழைத்து சுமார் 10 நிமிடம் வரை பேசியுள்ளார். அவர் முக்கிய அரசியல் பிரமுகரிடம பேசியதாக தகவல் வெளியானது. அது யார் என்று கண்டுபிடிக்கவேண்டும் என்று காங்கிரஸ், பா.ஜ., கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கிடையே சொப்னா ஆஸ்பத்திரியில அனுமதிக்கப்பட்டிருந்த அன்று கேரள உள்ளாட்சி துறை அமைச்சர் மொய்தின் மருத்துவமனைக்கு சென்றதாக தகவல் ெவளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் மர்மம் இருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

Related Stories: