உடந்தையான அதிகாரிகளை கண்டுகொள்வதில்லை டாஸ்மாக்போல மணல் விற்பனை அரசு ஏற்று நடத்தினால் என்ன? அறிக்கை கேட்கிறது ஐகோர்ட் கிளை

மதுரை: டாஸ்மாக் போல மணல் விற்பனையையும் அரசே ஏற்று நடத்தினால் என்ன என்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட் கிளை, அரசுத்தரப்பில் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் சவுடு மண் அள்ள ஏற்கனவே தடை உள்ளது. இந்நிலையில் சிவகங்கை, விருதுநகர் மற்றும்  தூத்துக்குடி மாவட்டங்களில் உபரி மண் என்ற பெயரில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள், “மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது. இந்த விவகாரத்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாகவே உள்ளனர். ஆனால், விஏஓக்கள், மின்வாரிய அதிகாரிகள் மீதான புகார்களின் மீது மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிகின்றனர். இவர்களைத் தவிர மற்ற அரசு துறைகளைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா? மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை விஏஓக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை வாகனங்கள், இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன?

மணல் கடத்தலை தடுக்க அரசின் விதிமுறைகள் அனைத்தும் கலெக்டர்களுக்கு தெரியுமா? இது தொடர்பான அரசின் உத்தரவை எத்தனை கலெக்டர்கள் பின்பற்றினார்கள்? மணல் கடத்தல் தொடர்பாக ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் வழக்குகள் வரை தாக்கலாகின்றன. கடத்தலை தடுக்க விஞ்ஞானரீதியாக ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? டாஸ்மாக்கைப் போல மணல் விற்பனையையும் அரசே ஏற்று நடத்தினால் என்ன? நீதிமன்றத்தின் கேள்விக்கு அரசின் விளக்கங்களும், பதில்களும் நீதிமன்றத்தை திருப்திபடுத்தும் வகையில் மட்டுமே உள்ளது. எந்த உத்தரவையும் செயல்படுத்துவதில்லை” எனக்கூறிய நீதிபதிகள், “இது தொடர்பாக தமிழக அரசுத்தரப்பில் தற்போதைய நிலை குறித்த அறிக்ைகயை, விரிவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்.29க்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: