யுஎஸ் ஓபன் டென்னிஸ் 2வது முறையாக ஒசாகா சாம்பியன்: பைனலில் அசரென்காவை வீழ்த்தினார்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியில், பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவுடன் (31 வயது, 27வது ரேங்க்) மோதிய நவோமி ஒசாகா (22 வயது, 9வது ரேங்க்) 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டிலும் அசரென்கா 2-0 என முன்னிலை பெற்றதுடன் அதை 3-0 ஆக அதிகரிக்க கேம் பாயின்ட் சர்வீஸ் போட்ட நிலையில், அவர் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், பதற்றமின்றி விளையாடிய ஒசாகா தனது வியூகங்களை மாற்றி அசரென்காவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ஒசாகாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அசரென்கா திணற, தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்த ஒசாகா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 1 மணி, 53 நிமிடம் போராடி வென்று 2வது முறையாக யுஎஸ் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். முன்னதாக, 2018ல் அவர் இங்கு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இது அவரது 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அவர் தனது 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஒசாகா கூறுகையில், ‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இது போல முதல் செட்டை இழந்து, 2வது செட்டிலும் பின்தங்கிய நிலை இருந்தால் நிச்சயமாக நான் போராடி இருக்க மாட்டேன். எளிதில் சரணடைந்திருப்பேன். ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் நான் விளையாடிய போட்டிகளில் இருந்து ஏராளமாக கற்றுக் கொண்டிருக்கிறேன். முன்பை விட முதிர்ச்சி மிக்க, முழுமையான வீராங்கனையாக என்னை செதுக்கிக்கொள்ள இந்த அனுபவம் உதவியுள்ளது. யுஎஸ் ஓபனில் விளையாடிய அனைத்து போட்டிகளுமே மிகக் கடினமானவை தான்’ என்றார். இந்த வெற்றியால், மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ஒசாகா மீண்டும் 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

Related Stories: