மதுக்கரை கொரோனா மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படுவது கால்நடைக்கு போடும் பழங்கள்: சிகிச்சை பெறுவோர் குற்றச்சாட்டு

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை,  கொடிசியா சிகிச்சை மையங்களில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.இதனால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நகர் மற்றும் புறநகரில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் முறையாக சிகிச்சை அளிப்பது இல்லை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வருகிறது. கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை மையத்திற்கு மதுக்கரை, க.க.சாவடி, மலுமிச்சம்பட்டி, சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து  கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மையத்தில் தரமான உணவு கிடைப்பது இல்லை எனவும், முறையான சிகிச்சை அளிப்பது இல்லை எனவும் நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கொரோனா நோயாளி ஒருவர் கூறியதாவது: ‘‘டாக்டர்கள் பரிசோதனை செய்வது இல்லை. மாத்திரை பற்றாக்குறை இருக்கிறது என கூறி  குறைவான அளவில் மாத்திரை அளிக்கின்றனர். தரமற்ற உணவுகளைத்தான் அளிக்கின்றனர். நேற்று முன்தினம் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், அனைவருக்கும் வாழை பழங்கள் வழங்கினர். இந்த பழங்கள் கால்நடைகளுக்கு போடும்  பழங்களைபோல் இருந்தன. நோயாளிகளை கைதிபோல் நடத்துகின்றனர். உணவு சரியாக கொடுப்பது இல்லை. 2 இட்லிதான் தருகின்றனர்.

அதுவும் சரியான நேரத்திற்கு அளிப்பது இல்லை. இது தொடர்பாக கேட்டால், இருப்பதைத்தான் கொடுக்க முடியும் என மிரட்டும் குரலில் பதில்  அளிக்கின்றனர்.இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: