தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பஞ். தலைவி: ஆட்சியரை சந்திக்க விடாததால் ஆவேசம்

தர்மபுரி: பொதுநிதி வழங்கக்கோரி, தர்மபுரி கலெக்டரை சந்திக்க வந்த இடத்தில் கொரோனா பரவலை காரணம் காட்டி தடுத்து நிறுத்தியதால்,  பஞ்சாயத்து தலைவி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அடிலம் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில், 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்றத்  தலைவராக தீபா அன்பழகன், துணை தலைவராக ராணி நாகராஜ் உள்ளனர். இவர்கள் பதவியேற்று 9 மாதம் ஆகிறது. ஆனால், இதுவரை ஊராட்சிக்கு  பொதுநிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதனால், கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல், ஊராட்சி மன்ற நிர்வாகம் தள்ளாடியது. இந்நிலையில், தலைவர் தீபா  அன்பழகன், ஊராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்து வழங்கும்படி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தீபா தலைமையில் துணைத்தலைவர்,  ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வந்தனர். அவர்கள், கலெக்டர் சேம்பர் நோக்கி சென்றபோது, கொரோனா தொற்று பரவல் நெறிமுறைகள் காரணமாக, கலெக்டரை நேரில் சந்திக்க முடியாது என  தெரிவித்து, ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். வேதனையடைந்த தீபா, தனது காரில் வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தற்கொலை முயற்சி மேற்கொண்டார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றி திருப்பி அனுப்பிவைத்தனர்.இதனால், கலெக்டரை  சந்திக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் சென்றார்.

Related Stories: