குருவாயூர் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா

*1000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம்

பாலக்காடு :  கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா மிகவும் எளிய முறையில் நேற்று கொண்டாடப்பட்டது. ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான குருவாயூர் கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கோயில் பிரகாரத்தில் கைகளில் புல்லாங்குழல்களுடன் உலா வரவைத்து மகிழ்வது வழக்கம்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 6 மாதமாக குருவாயூர் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில்தான் பக்தர்கள் கோயிலுக்கு மிகுந்த கட்டுப்பாடுடன் வந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த 7 ம்தேதி முதல் பக்தர்கள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு சாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெரிச்சுவல் க்யூ அனுமதி சீட்டு மூலமாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று கிருஷ்ணர் ஜெயந்தி விழாவையொட்டி பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர், பாமா-ருக்மணி வேடங்கள் தரித்து கோயிலின் முன்பாக அனுமதிக்கப்பட்டுள்ள கொடிமரத்தின் முன்னால் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். கிருஷ்ணஜெயந்தி நாளான நேற்று கோயிலின் வளாகத்தில் உற்சவமூர்த்தி யானை மீது செண்டை வாத்யங்கள்  முழங்க எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயில் வளாகத்தில் நின்றிருந்த  குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் சுவாமியை தரிசித்து பரவசமடைந்தனர். கடந்த 6 மாத கால இடைவேளைக்குப் பின்னர் குருவாயூர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் பிரசாதங்களான பால் பாயசம், பழம்-சர்க்கரை, கதளிப்பழம்-தாமரை, துளசி மாலை, சந்தனக்காப்பு ஆகியவற்றை வாஙகுவதற்கு சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.  நேற்றைய தினத்தில் ஆயிரம் பக்தர்கள் சிறப்பு க்யூவில் நின்று தரிசனம் செய்வதற்கு  குருவாயூர் தேவஸ்தானம் அனுமதி வழங்கியிருந்தது. இதனால் பக்தர்கள் நீண்டவரிசையாக  நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வந்திருந்த பக்தர்கள் தங்களது  குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடங்கள் தரித்து நேர்த்திகடன்களை நிறைவேற்றினர்.

Related Stories: