தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைன் முறையில் நடக்கிறது. இத்தேர்வினை மாணவர்கள் வீட்டில் இருந்து எழுதி வருகின்றனர். இதுகுறித்து பல்கலைக்கழத்தின் தேர்வாணையர் சூரியநாத சுந்தரம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 14 உறுப்பு கல்லூரிகளும், 29 இணைப்பு கல்லூரிகளும், வேளாண் சார்ந்த பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், இறுதியாண்டு மாணவர்கள் 2,365 பேர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு இறுதி பருவத்திற்கான பாடங்கள் அனைத்தும் ஆசிரியர்கள் மூலம் ஆன்லைனில் நடத்தப்பட்டது.

தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வு வரும் 14ம் தேதியுடன் முடிகிறது. தற்போது நிலவி வரும் சூழ்நிலை மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு ஆன்லைன் தேர்வுகள் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கடந்த 1971ம் ஆண்டு துவங்கப்பட்டது. 49 வருடங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: