போளூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

போளூர்:  போளூர் பேருராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய பேருராட்சியாக போளூர் உள்ளது. இங்குள்ள 18 வார்டுகளில் 45 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஆனால்,  சுமார் 50 ஆண்டுகளாக பேரூராட்சிக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த  வேண்டும் என்று முன்வைத்துள்ள கோரிக்கைகள்: போளூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி, போளூர், கலசபாக்கம், ஜவ்வாதுமலை ஆகிய  தாலுகாக்களை உள்ளடக்கி போளூரை தலைமையிடமாக்க வேண்டும். ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அரசு கால்நடை  மருத்துவ கல்லூரி, அரசு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வரவேண்டும்.

நகருக்கு வெளியே புதிய பஸ்நிலையம், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வணிக வளாகம், சந்தவாசல் பகுதியில் கால்நடை தீவன  தொழிற்சாலை, போளூர் மக்களின் நீண்ட  நாள் கோரிக்கையான முருகாபாடி, பாக்மார்பேட்டை, எட்டிவாடியில்  தொழிற்பேட்டை  மற்றும் சந்தவாசல்,  படவேடு பகுதியில் வாழை, மஞ்சள் ஆராய்ச்சி மையம்  மதிப்பு கூட்டும் நிலையங்கள் அமைக்க வேண்டும். சம்பத்கிரி மலை சுற்றும் பாதை வழியாக புதிய வெளிவட்ட பாதை அமைக்க உடனடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், களம்பூர் அரிசி  ஆலைகள் தமிழ்நாடு ஆராய்ச்சி மையம், ேபாளூர் வெண்மணி பைபாஸ் சாலை 4 முனை சந்திப்பில் விபத்து அபாயம் அதிகமாக இருப்பதால் அங்கு  மேம்பாலம் அமைக்க வேண்டும்.

கரைப்பூண்டி தரணி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். போளூரில் புற நோயாளிகள் பிரிவும், நகருக்கு வெளியே உள்நோயாளிகள்  பிரிவும் தனித்தனியாக இருக்கிறது. இதனை நகர பகுதியில் ஒருங்கிணைந்த அரசு மருத்துவமனையை உருவாக்க வேண்டும். முடையூரில் கற்சிற்ப கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். போளூரில் உள்ள கோட்டை மைதானத்தை சீரமைத்து மாவட்ட துணை விளையாட்டு  அரங்கம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்துள்ளனர்.

Related Stories: