ஆரணி நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆரணி: ஆரணி நகராட்சியில் ேபாக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரணி  நகராட்சிக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும்  தங்களது வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஆரணியில் பல்வேறு தெருக்கள் மற்றும் சாலைகளில்   கேட்பாரின்றி மாடுகள் சுற்றித்திரிந்து வருகிறது. குறிப்பாக, ஆரணி டவுன், பழைய, புதிய பஸ் நிலையம், எம்ஜிஆர் சிலை, காந்தி சாலை, சத்தியமூர்த்தி சாலை, அண்ணா சிலை,  பெரியக்கடை வீதி, சைதாப்பேட்டை, தச்சூர் சாலைகளில் பகல், இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் போக்குவரத்துக்கும்,  பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிகிறது.

சில நேரங்களில் மாடுகள், சாலைகளில் செல்லும் பொதுமக்களை முட்டிதள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. அதேபோல்,  சாலை நடுவில் படுத்துக்கொண்டும், நின்று கொண்டும் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல்  சிரமப்படுகின்றனர்.அதேபோல், அவசர காலங்களில் செல்லும் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல வழியில்லாமல் நீண்ட நேரம்  காத்திருக்க வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் சாலைகளில் படுத்துறங்கும் மாடுகள் மீது வாகனங்கள் மோதி, மக்கள் கீழே  விழுந்து ரத்த காயங்களுடன் வீடு திரும்புகின்றனர். பல இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திடம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆரணி நகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த  வேண்டும், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: