திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அமோக விற்பனை..!! அச்சடித்த 2 பேரை கைது செய்தது போலீஸ்!!!

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் அச்சடிக்க பயன்படுத்திய உபகரணங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், எரியோடு, குஜலையம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக காவல் துறைக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் எரியோட்டில் ஜவுளி கடை நடத்தி வரும் பரமசிவம் மற்றும் அவரது கூட்டாளி விஜயகுமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள், 3 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய உபகரணங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். லாட்டரி சீட்டு அச்சடித்த வழக்கில் பரமசிவம் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவராவார். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்கியுள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வேடசந்தூர் சுற்றுவட்டாரத்தில் கொடிகட்டி பறக்கும் லாட்டரி சீட்டு விற்பனையை அறவே ஒழிக்கவேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏனெனில் இந்த லாட்டரி விற்பனைகள் மூலம் இதுவரை பல குடும்பங்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றை விட கொடிய நோய் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: