கோவையில் வீடு இடிந்து 2 பேர் உயிரிழந்த விவகாரம்: ஸ்மார்ட் சிட்டி பணியால் விபத்து ஏற்படவில்லை என எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் விளக்கம்

கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணியால் வீடு இடிந்து விபத்து ஏற்படவில்லை என்று எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன்  விளக்கம் அளித்துள்ளார். கோவை பேரூர் பிரதான சாலை, செட்டிவீதி அருகேயுள்ள கே.சி.தோட்டம் பகுதியில் தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது. இங்கு முதல் தளத்தில் கண்ணன், அவரது மனைவி ஸ்வேதா, குழந்தை தன்வீர்(5), கண்ணனின் தாய் வனஜா(65), கண்ணனின் தங்கை கவிதா(46) ஆகியோர் வசித்து வருகின்றனர். தரைத்தளத்தில் பாபு, சரோஜினி(70) உட்பட 3 பேர் வசிக்கின்றனர். இந்த கட்டிடம் சற்று பழுதடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவையில் மாலை நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாலையும் மழை பெய்தது. தொடர் மழையால் நேற்றிரவு சுமார் 9.15 மணியளவில் மேற்கண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தின் சுவர்கள் சரிந்து பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது.

இதில் கண்ணன், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், தரைத்தளத்தில் வசித்து வந்தவர்கள், பக்கத்தில் உள்ள ஓட்டு வீட்டில் வசித்து வந்த கோபாலசாமி(72), கஸ்தூரி(65), மணிகண்டன்(42) ஆகிய 3 பேர் என 9க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதுகுறித்துத் தகவலறிந்த கோவை தெற்கு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் ஸ்வேதா(25), கோபாலசாமி(72) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். தன்வீர், வனஜா, மனோஜ்(47), மணிகண்டன், கவிதா, சரோஜினி ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கஸ்தூரி உள்ளிட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விபத்துக்கு ஸ்மார்ட்சிட்டி பணிகள் தான் காரணம் என்ற புகாரை கோவை தெற்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் மறுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து நடந்த வீடு அருகில் குளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற வீடுகள் உறுதியாக இருக்கும் நிலையில் ஸ்மார்ட் சிட்டி பணியால் விபத்து என அரசியலுக்காக சிலர் புகார் கூறுகின்றனர், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: