தாவூத் இப்ராகிம் கூட்டாளியா என விசாரணை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மர்ம நபர் போனில் மிரட்டல்: வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் வீடு மும்பை கலாநகரில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மர்ம மனிதன் ஒருவன் முதல்வரின் வீட்டு தொலைபேசியில் பேசினான். துபாயில் இருந்து பேசுவதாக கூறிய அவன், சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் சார்பில் பேசுவதாகவும், தாவூத் இப்ராகிம் முதல்வருடன் பேச விரும்புவதாகவும் கூறினான். அடுத்தடுத்து 2 முறை முதல்வர் வீட்டு தொலைபேசியில் அவன் பேசினான். ஆனால், தொலைபேசி ஆபரேட்டர் முதல்வருக்கு அந்த போன் இணைப்பை கொடுக்கவில்லை. இது பற்றி அறிந்த போலீசார், முதல்வரின் வீட்டுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தினர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், `‘தொலைபேசியில் பேசிய மர்ம மனிதன் துபாயில் இருந்துதான் போன் செய்தானா என்று உறுதி செய்ய வேண்டும்,’’ என்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை நடத்தி வருகின்றனர். 1993ம் ஆண்டு மும்பையில் சுமார் 250 பேரை பலி கொண்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட சர்வேதேச பயங்கரவாதிதான் தாவூத் இப்ராகிம். பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் அவனை ஐ.நா.வும், அமெரிக்காவும் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளன. தாவூத் இப்ராகிமின் பெயரை சொல்லி மர்ம மனிதன் முதல்வர் வீட்டுக்கு போன் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: