அதே பிரமாண்டம்; அதே அளவு அயோத்தியில் 15 ஆயிரம் சதுர அடியில் புதிய மசூதி: அறக்கட்டளை முடிவு

லக்னோ: ராமஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பை அடுத்து அயோத்தியில் அமைக்கப்பட உள்ள புதிய மசூதி, பழைய பாபர் மசூதியின் அளவிலேயே கட்டப்படும் என அறக்கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடமாக இருந்த இடத்தில் ராமர் கோயிலை கட்டுதவற்கும், மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த மாதம் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மசூதி அமைப்பதற்காக, அயோத்தி அருகே உள்ள தானிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை  மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இங்கு மசூதி கட்டுவதற்காக, ‘இந்தோ - இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை’ என்ற பெயரிலான அமைப்பை உத்தரப் பிரதேச சன்னி மத்திய வாரியம் அமைத்துள்ளது.

இது பற்றி இந்த அறக்கட்டளையின் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான அத்தர் ஹூசைன் கூறுகையில், “அயோத்தியின் தானிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் இடத்தில் அமையவுள்ள மசூதி வளாகத்தில் மருத்துவமனை, நூலகம் மற்றும் அருங்காட்சியகம் உள்ளிட்டவையும் அமைக்கப்படும். அயோத்தியில் இருந்த அதே அளவில், அதே பிரமாண்டத்தில் 15 ஆயிரம் சதுர அடியில் புதிய மசூதி கட்டப்படும். மீதமுள்ள இடத்தில் இந்த வசதிகள் செய்யப்படும். டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் எஸ்எம். அக்தார், மசூதியின் கட்டிட கலை வடிவமைப்பாளராக இருப்பார்,” என்றார்.

Related Stories: