குறைந்தபட்ச அரசு; அதிகபட்ச தனியார்மயம், இளைஞர்கள் எதிர்காலத்தை கொள்ளையடிக்கிறார் மோடி: ராகுல் ஆவேச குற்றச்சாட்டு

புதுடெல்லி: மத்திய அரசு பணிகளுக்கு ஊழியர்கள் தேர்வு செய்வது குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, `மோடி அரசின் பங்கீட்டு முறை குறைந்தபட்ச அரசு; அதிகபட்ச தனியார் மயமாக்கலை கொண்டுள்ளது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். செலவினத் துறையின் அனுமதி பெற்ற பிறகே, அரசு பணிகளுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோடி அரசின் வினியோகம், பங்கீட்டு முறை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவரது டிவிட்டர் பதிவில் வழக்கம் போல் விமர்சித்துள்ளார்.

அதில், `மோடி அரசின் வினியோக முறை, குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச தனியார் மயமாக்கலை அடிப்படையாக கொண்டுள்ளது,’ என்று பத்திரிகை செய்தியை ஆதாரமாக இணைத்து வெளியிட்டுள்ளார். மேலும் தனது பதிவில், `கொரோனா தொற்றை காரணமாக காண்பித்து, அரசு அலுவலகங்களில் நிரந்தர ஊழியர்கள் இல்லாமல் ஆக்குவதே மோடி அரசின் திட்டம். இளைஞர்களின் எதிர்காலத்தை கொள்ளையடித்து தனது நண்பர்களை (அதானி, அம்பானி) ஊக்குவிக்கும் உள்நோக்கத்துடன் மோடி செயல்படுகிறார். மக்கள் இதுகுறித்து உடனடியாக பிரதமரிடம் கேள்வி எழுப்ப வேண்டும்,’ என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஊரடங்கின் பயன்களை அறுவடை செய்யவில்லை

கொரோனா தொற்று இந்தியாவில் 40 லட்சத்தை கடந்துள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், ``வரும் 30ம் தேதிக்குள் தொற்று 55 லட்சத்தை அடையும். இல்லையெனில், 20ம் தேதிக்குள் 55 லட்சத்தையும், மாத இறுதிக்குள் 65 லட்சத்தையும் எட்டும். உலகளவில் கொரோனா ஊரடங்கு உத்தியின் பயன்களை அறுவடை செய்யாத ஒரே நாடு இந்தியாகவே மட்டுமே இருக்கும். மற்ற நாடுகள் இதில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியா மட்டும் ஏன் தோல்வியை தழுவியது? `21 நாட்களில் கொரோனாவை விரட்டியடிப்போம்’ என்று கூறிய பிரதமர் மோடி இதற்கு பதிலளிக்க வேண்டும். 2020-21ம் ஆண்டின் முதல் காலாண்டில் முன் எப்போதும் இல்லாததை விட பொருளாதாரம் சரிவடைந்திருப்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்,’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: